செய்திகள்

கூட்டமைப்பை பார்வையாளர்களாகவேனும் அழைக்காமை கண்டனத்துக்குரியது : யோகேஸ்வரன்

இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளபோதிலும் இந்திய அரசாங்கம் இலங்கையில் மேற்கொள்ளும் செயற்றிட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பார்வையாளர்களாவது அனுமதிக்கவில்லையென்பது கவலைக்குரியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கவலை தெரிவித்துள் ளார்.

நேற்று மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் இலங்கையில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுவரும் எந்த செயற்றிட்டத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை இணைத்துசெயற்படவில்லை.அவர்களின் செயற்பாடுகள் இங்குள்ள அரசாங்கத்தின் விருப்பங்களை பூர்த்திசெய்யும் வகையிலேயே அமைந்திருந்தது.

இந்திய அரசாங்கத்தின் 50ஆயிரம் வீட்டுத்திட்டம் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டபோது அதில் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது.அந்த வீடுகள் அன்றைய ஆட்சியாளர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வீட்டுத்திட்டத்தின் பெரும்பாலான வீடுகள் அந்த அரசாங்கத்தினை ஆதரித்தவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தன.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் அந்த வீடுகள் வழங்கப்படவில்லை.
இதேபோன்று வாகரைப்பிரதேசத்தில் கடந்த காலத்தில் 17 அலியா மீன்பிடி படகுகள் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.

ஆனால் அந்த படகுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெயம் என்பவரும் முன்னாள் முதலமைச்சரும் இணைந்து தமது உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளனர்.

காயங்கேணி மீனவர் சங்கம் என்ற பெயரில் தமது உறவினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இவை பகிரப்பட்டுள்ளதுடன் நூறு வீதம் தமிழ் மக்கள் வதியும் வட்டவான் பகுதியில் முஸ்லிம் ஒருவருக்கு மீனவர் சங்கம் என்ற பெயரில் வழங்கப்பட்டது.

இவ்வாறு இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் அனைத்தும் அது மக்களுக்கு சென்றடையவில்லை.அவை அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கே வழங்கப்பட்டது.இவை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இந்தியா இணைந்து செயற்பட்டிருந்தால் அவை பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைந்திருக்கும்.

இந்திய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளினால் அந்த நாட்டினால் வழங்கப்படும் உதவிகள் உண்மையில் பாதிக்கப்பட் மக்களை சென்றடையும் நிலை குறைவாகவே உள்ளது. இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறக்கணித்து செயற்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ளபோது அவற்றினை கருத்தில்கொள்ளாமல் செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

முஸ்லிம் நாடுகள் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு உதவ முன்வரும்போது அவை நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று அந்த மக்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அந்த உதவிகளை செய்யும்போது அவை அந்த மக்களுக்கு பூரண வெற்றியை அளிக்கின்றது.

ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளை உள்வாங்காத நிலையே தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றதுடன் இந்தியா புறக்கணித்தே வருகின்றது என்றார்.