செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வைத்தியசாலையில்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டெதன் செம்புவத்தை தோட்டத்தில்  நேற்று  இரவு 7.30 மணியளவில் குறித்த தோட்டத்தின் கோவிலுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை உட்பட மகன் மூவரும் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-

மேற்படி தோட்டத்தை சேர்ந்த ஒரு நபருக்கும் இவர்களுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற முரண்பாடுகள் காரணமாக சம்மந்தப்பட்ட நபர் இவர்களை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

காயம்பட்ட மூவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனா்.

மேலும் சந்தேக நபரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் சந்தேக நபர் காயங்களுக்குள்ளாகி இருப்பதனால் பொலிஸ் பாதுகாப்புடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC00241