செய்திகள்

கெளதம் மேனன் – சிம்பு படத்தின் கதாநாயகி திடீர் நீக்கம்

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் கதாநாயகியான பல்லவி சுபாஷ், கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கு முன்பே சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்தார் கெளதம் மேனன். அப்படத்துக்கு கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் பல்லவி சுபாஷ். இவர் மராத்தி படங்களிலும் ஹிந்தி சீரியல்களிலும் நடித்து கவனம் பெற்றிருந்தார்.

40 சதவீதப் படப்பிடிப்பு நடந்தபிறகு திடீரென அஜீத் படத்தை இயக்கச் சென்றார் கெளதம். பிறகு இந்த மார்ச் மாதம் சிம்பு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பும் வைக்கப்பட்டது. தில் பல்லவி கல்லூரிப் பெண்ணாக நடித்து வந்தார்.

இப்போது திடீரென இந்தப் படத்திலிருந்து பல்லவி சுபாஷ் நீக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் பல்லவி கொடுத்த தேதிகளை கெளதமால் பயன்படுத்தமுடியவில்லை. பிறகு அவருக்கு கால்ஷீட் தேவைப்படும்போது பல்லவி, ஹிந்தி சீரியல்களில் நடித்துவந்தார். மேலும் சமீபத்தில் அவர் புனீத் ராஜ்குமாரின் 25-வது கன்னடப் படத்துக்கும் கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கெளதம் – சிம்பு படத்துக்கு அவரால் தேதிகள் ஒதுக்கமுடியாமல் போனது.

பல்லவியை வைத்து சில காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டிருந்தாலும் பல்லவியால் தாமதம் ஆகக்கூடாது என்பதற்காக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதுமுகம் நடிப்பார் என்று தெரிகிறது.