செய்திகள்

கே.பி.க்கு எதிராக நடவடிக்கை ஆரம்பம்: ராஜித! இதுவரை யாரும் தொடர்புகொள்ளவில்லை: கே.பி.!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்திருக்கும் அதேவேளையில், இந்த விசாரணைகள் தொடர்பாக யாரும் தன்னுடன் இதுவரையில் தொடர்புகொள்ளவில்லை என கே.பி. தெரிவித்திருக்கின்றார்.

“விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கே.பிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது” என அமைச்சர் ராஜித ஊடகங்களுக்கு நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கிளிநொச்சியில் உள்ள கே.பி.யை தொடர்புகொண்டு கேட்டபோது, “இதுவரையில் இவ்வாறான விசாரணைகள் தொடர்பாக யாரும் என்னிடம் தொடர்புகொள்ளவில்லை. எனக்கு எதிராக ஜே.வி.பி. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருப்பதாக பத்திரிகைகள் வாயிலாகவே அறிந்தேன். ஆனால், நீதிமன்ற உத்தரவு எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.