செய்திகள்

கே.பி.க்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது: அமைச்சர் ராஜித அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனபரட்ண தெரிவித்திருக்கின்றார்.

ஊழல், மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவர்களைக் கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும் என்றும், மோசடிக்காரர்கள் தப்பிக்கவே முடியாது என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-

“ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எவரேனும் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றிருப்பார்களாயின், இனியும் செல்வார்களாயின் அவர்களைக் கைதுசெய்வது ஒன்றும் கடினமான விடயமல்ல. சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அவர்கள், மோசடிக்காரர்களை கைதுசெய்து நாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள். அதன் பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .

அத்துடன், கே.பிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.”