செய்திகள்

கே.பி. மீதான வழக்கு: பதிலளிக்க அரசாங்கத்துக்கு கால அவகாசம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சாவதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் மீது இலங்கை அரசு வழக்கு போடாமல் இருப்பது குறித்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் ஜேவிபி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் அரசுக்கு பதில் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்கியிருக்கிறது.

அதேசமயம் குமரன் பத்மனாதன் மீது எடுக்கப்படவிருக்கும் சட்ட நடவடிக்கைகள் என்ன என்று அறிவிப்பதை சட்டமாஅதிபர் தாமதப்படுத்துவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹெரத் தாக்கல் செய்த மனு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் சட்டநடவடிக்கைகள் என்ன என்று அறிவிப்பதற்கு தமக்கு காலாவகாசம் தேவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த விடயம் குறித்து தெளிவு ஏற்படுத்த ஏற்கெனெவே அரசு தரப்புக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாக கூறிய நீதிபதிகள் மேலும் காலாவகாசம் வழங்க முடியாதென்று அறிவித்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத், குமரன் பத்மநாதன் தொடர்பாக கடந்த காலத்தில் மேற்கொள்ளப் பட்ட விசாரணைகள் குறித்து தன்னால் எதுவும் கூற முடியாதென்று தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஆராய்ந்து விளக்கமளிப்பதற்கு ஒருவாரம் காலஅவகாசம் தேவை என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிப்ரவரி 26ஆம் தேதி இந்த விடயம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டதாக இந்த வழக்கை தாக்கல் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹெரத் தெரிவித்தார்.

குமரன் பதமநாதன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அடிப்படையற்ற தாமதத்தை காட்டிவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த காலத்தில் குமரன் பத்மநாதன் சம்பந்தமாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலேயே சட்டமா அதிபருக்கு அது குறித்து நீதிமன்றத்தில் எதையும் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹெரத், இனியாவது குமரன் பத்மநாதனை கைது செய்து முறையான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று நீதிமன்றத்திடம் தாம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிவித்தார்.