செய்திகள்

கே.பி.யை பகிரங்க நீதிமன்றில் நிறுத்தவேண்டும்: ஜே.வி.பி. தலைவர் வலியுறுத்தல்

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் கிடையாது என்று தெரிவித்த ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமாரதிசாநாயக்க, வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்தோரால் இலங்கையில் எதையும் செய்ய முடியப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து பகிரங்க நீதிமன்றத்தில் நிறுத்தினால், யுத்தம் நடத்தப்பட்ட விதம் பற்றி இலங்கை மீது இருந்து வரும் சர்வதேச அழுத்தத்திற்கு அது சிறந்த பதிலாக அமையும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;

தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து காணிப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று திங்கட்கிழமை நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கென்று காரணம் காட்டி காணிகளைப் பெற்று இராணுவத்தினர் மரக்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமல்லாது, கோல்ப் மைதானமொன்றும் அமைக்கப்படுகிறது. மக்களின் காணிகளை எடுத்து ஹோட்டல் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இவை தேசிய பாதுகாப்பல்ல. இவ்வாறான விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் காணிகள் மக்களுக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும்.

தேசியப் பாதுகாப்புக்கு அவசியமானவற்றைத் தவிர்ந்த ஏனைய காணிகளை மக்களுக்கு வழங்குங்கள். வடக்கில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் இன்னும் சொந்த இடங்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் இருக்கின்றனர். தேசிய பாதுகாப்புக்கு தேவையான முன்னுரிமையை வழங்கி ஏனைய காணிகளை மக்களிடம் ஒப்படையுங்கள்.

இதேநேரம், வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவ நீக்கமோ அல்லது அகற்றமோ இடம்பெறவில்லை. இலங்கையின் அமைப்புக்கு அமைய இராணுவம் நிலைகொள்ளச் செய்யப்பட வேண்டும். ஒரு இடத்தில் மட்டுமே தேசிய பாதுகாப்பு பிரச்சினை இருக்க முடியாது. அதுமட்டுமல்லாது, இலங்கையில் மீண்டும் புலிகள் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் கிடையாது. புலம்பெயர்ந்தோரும் வெளிநாடுகளில் விருந்துகளில் அல்லது கேளிக்கைகளில் பங்குபற்றுவது போன்று தான் ஒன்றுகூடுகின்றனர். அவர்களால் இங்கு வேறு எதனையும் செய்துவிட முடியாது.’

ஆனால், இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் அதுதான் உண்மையில் பிரச்சினையாகும். வடக்கில் இருந்து இராணுவ முகாம் எதுவும் அகற்றப்படவில்லை. இதேநேரம், கே.பி.யை கைது செய்வது தமிழ் புலம்பெயர்ந்தோரின் தேவை என்று ஒருவர் கூறிக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், பணம், சர்வதேச தொடர்புகள் ஆகிய 3 விடயங்கள் தான் இந்நாட்டில் யுத்தம் 30 வருடங்களுக்கு நீடிக்க காரணமாக அமைந்திருந்தன.

புலிகளுக்கான ஆயுத விநியோகம் கே.பி.யினாலேயே மேற்கொள்ளப்பட்டது. இராணுவம், பொலிஸ் மற்றும் மக்கள் மத்தியில் உளவாளிகளைப் பயன்படுத்துவதற்கு கே.பி. ஊடாக கிடைத்த பணமே புலிகளினால் பயன்படுத்தப்பட்டது. அதேபோல், புலிகளின் சர்வதேச தொடர்புகளில் அன்டன் பாலசிங்கம் போலவே கே.பி. வழங்கிய பங்களிப்பும் மிக முக்கியமானது. ஆகையால் தான், பிரபாகரன் கொல்லப்பட்டதும் கே.பி. புலிகள் அமைப்பின் தலைவரானார். இதிலிருந்தே அவரது பங்களிப்பு என்னவென்பது புலனாகிறது.

அவர் இராணுவத்தினால் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் என்ன நடந்தது என்பது கேள்விக்குறியே. யுத்தம் நடத்தப்பட்ட விதம் பற்றி இலங்கை மீது சர்வதேச அழுத்தமொன்று இருந்து வரும் நிலையில், கே.பி.யை கைது செய்து பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அதற்குச் சிறந்த பதிலாக அமையும்.

அமெரிக்காவில் சட்ட ரீதியான ஆயுத சந்தை போன்றே ஆயுத விற்பனையில் கறுப்புச் சந்தையும் இருக்கிறது. கே.பி.யை பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தகவல்களைப் பெற முடியும். மேற்குலகத்தின் இரட்டை வேடத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும். கே.பி. மௌனமாக இருப்பது தான் அமெரிக்காவினதும் தேவையாக இருக்கிறது.

கே.பி.யை பகிரங்க நீதிமன்றத்தில் நிறுத்துவது தான் மேற்குலக அழுத்தங்களின் உண்மையான நிலைமையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு சிறந்த வழியாகும். இதைச் செய்வதில் அரசு இன்னும் தாமதமாக இருக்கிறது. ஆகையால் தான், கே.பி.யை கைது செய்து பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதேநேரம், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையின் அடுத்த கூட்டத்திற்கு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், அவர்கள் பற்றிய முழு விபரங்கள் கிடைத்ததும் அவர்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று அங்கு முடிவாகியிருப்பதாகவும் அநுரகுமார திசாநாயக்க இதன்போது மேலும் தெரிவித்தார்.