கைதான பகீரதி குறித்து பிரான்ஸ் தூதரகத்துக்கும் தகவல்: தடுப்புக் காவலில் விசாரணை
இலங்கை வந்த பின்னர் பிரான்ஸ் திரும்பும் வழியில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் கடற்படை பெண் தளபதி என கூறப்படும் முருகேசு பகீரதி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பகீரதியின் மேற்பார்வை அல்லது ஆலோசனைகளின் கீழ் இங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டதா என்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தற்போது விசாரணை செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
41 வயதான பகீரதி கைது செய்யப்படும் போது அவருடன் இருந்த அவரது 8 வயது பிரான்ஸ் குடியுரிமையைப் பெற்ற மகளும் நீதிமன்ற அனுமதியுடன் 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ் உள்ள பகீரதியுடனேயே தங்கியுள்ளதாகவும் இது தொடர்பில் பிரான்ஸ் தூதுவராலயத்துக்கு தகவல்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
பிரான்ஸிலிருந்து கடந்த மாதம் இலங்கை வந்திருந்த பகீரதியும் அவரது 8 வயது மகளும் கிளிநொச்சியில் உள்ள பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் விடுமுறையை கழித்துவிட்டு திரும்பும் வழியிலேயே கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5.40 மணியளவில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ள பகீரதி 2005-ஆம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பிலேயே தற்போது விசாரணை இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட அஜித் ரோஹண இதுவரை அவர் நேரடியாக தாக்குதலுடன் தொடர்பு பட்டமை குறித்தான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
“இந்தப் பெண் 1997-ஆம் ஆண்டிலிருந்து 2000ஆ-ம் ஆண்டுவரை கடற்புலிகளின் தலைவியாக இருந்துள்ளார். அவர் 2005-ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் அவரது காலப்பகுதியில் இலங்கை கடற்படை மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
நேரடியாக அவர் தலைமை தாங்கி தாக்குதல்களை நடத்தினாரா என்பதை உறுதியாக கூறமுடியாத போதும் அவரது மேற்பார்வை, ஆலோசனையின் கீழ் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் நடைபெறுகின்றன. அத்துடன் தற்கொலை குண்டுதாரிப் பெண் களை தயார்படுத்தும் திட்டங்களிலும் அவர் பங்கெடுத்தாரா என்பது குறித் தும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப் பட்டுள்ளது” எனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.