செய்திகள்

கையில் பணம் இல்லாததால் வீட்டுக்கு நடந்தே சென்ற சச்சின்

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை வீட்டுக்கு போக வாடகை காருக்கு பணம் இல்லாமல் சாலையில் நின்றதாக தெரிவித்துள்ளார்.சச்சின் இப்போது கோடீஸ்வராக, உலகம் அறிந்த பிரபலமாக இருக்கலாம். ஆனால், 12 வயது சிறுவனாக இருந்தபோது, அவரது பெயர் கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட போகிறது என யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு 12 வயது இருக்கும் போது மும்பையின் 15 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தேன். நாங்கள் புனேவிற்கு சென்று விளையாடினோம்.

ஆனால் மழை பெய்ததால் போட்டிகள் முழுதாக நடக்கவில்லை. எனவே நாங்கள் திரையரங்கு, பூங்கா என்று சுற்றியலைந்து செலவு செய்தோம். நானும் என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்காமல் செலவு செய்துவிட்டேன். எனவே புனேவில் இருந்து மும்பை வந்து இறங்கியபோது என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. போதாததற்கு நான் இரண்டு பெரிய பேக் வேறு வைத்திருந்தேன். இதனால் வேறு வழியில்லாமல், வீட்டிற்கு நடந்தே சென்றேன். அந்த வயதில் எப்படி செலவு செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

அந்த தொடரில் 15 வயது பையன்களுக்கு நிகராக என்னால் ஓட முடியவில்லை. இதனால் 4 ரன்களில் ரன் அவுட் ஆகிவிட்டு, ஓய்வு அறையில் வந்து அழுதேன்” என்று சச்சின் கூறினார்.