செய்திகள்

கொக்கிளாயில் அமைக்கும் விகாரையின் கட்டுமானத்தை நிறுத்துக: ஆனந்தன் ஜனாபதிபதியிடம் கோரிக்கை

முல்லைத்தீவு கொக்கிளாயில் தனியார் காணியொன்றில் பௌத்த துறவியொருவரால் அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமானப்பணியை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொக்கிளாயில் மருத்துவமனை அமைந்துள்ள பகுதி மற்றும் அதற்கு அண்மைய தனியாருக்குச் சொந்தமான காணிகளை நீதிமன்ற ஆணையையும் மீறி அடாத்தாக அபகரித்து, படைத்தரப்பினரின் உதவியுடன் பௌத்ததுறவி ஒருவர் புத்தவிகாரையை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காணி அபரிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011ம் ஆண்டிலிருந்து அப்போதைய அரசாங்கத்திடம் பல்வேறு முறைப்பாடுகளைச் செய்தும் இன்றுவரை குறித்த காணி உரியவரிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்பொழுது அங்கு விகாரையை கட்டும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.

வடமாகாணத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தவிகாரை கட்டுமானங்களுக்கு எதிராகவும் குறிப்பாக தனியார் காணிகளை அபகரித்து விகாரை அமைக்கும் பணிகளுக்கு எதிராகவும் நாம் தொடர்ந்தும் எமது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்துள்ளோம். மேற்படி கொக்கிளாய் தனியார் காணி தொடர்பாக முந்தைய அரசாங்கத்துடனும்கூட பல்வேறு முறைப்பாடுகளைச் செய்துள்ளோம். மேற்படி கொக்கிளாயில் உள்ள தனியார் காணி தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவை அனைத்தையும் அசட்டைசெய்து படைத்தரப்பினர் இப்பொழுது கொக்கிளாயில் உள்ள தனியார் காணியில் விகாரை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் தலைமையில், படையினர் உங்களது ஆணைக்குக் கட்டுப்பட்டு இத்தகைய சட்டவிரோதமான தர்மத்துக்கம் நீதிக்கும் புறம்பான பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்றும் சட்டத்தின்மீது எவ்வித அச்சமும் தயக்கமுமின்றி சட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்களது அரசாங்கம் இத்தகைய தர்மவிரோத சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தவறுமானால், நல்லிணக்கம் என்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று நாங்கள் உணர்கின்றோம். ஆகவே. தாங்கள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு, கட்டுமானப் பணிகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து, படையினரை திரும்பவும் தங்களது முகாம்களுக்குள் இருக்குமாறு பணிப்புரை வழங்க வேண்டும்.

அத்துடன் குறித்த காணியை உரித்துடைய தனியாருக்கே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். இது மட்டுமே வடமாகாணத்தில் அமைதியையும் இயல்பு வாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும். இந்த விடயத்தில் தங்களது காத்திரமான உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.