செய்திகள்

கொக்கிளாயில் விகாரை கட்டுவது உடனடியாக இடைநிறுத்தம்

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விகாரை அமைக்கும் பணி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் பொருட்டு  வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின்   நடமாடும் சேவையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இரண்டு வருடங்களில் காணிப் பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். இதனடிப்படையில் பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர் போன்ற அதிகாரிகளால் தீர்க்கப்படாத முல்லைத்தீவு மாவட்ட காணிப் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்காக காணி ஆணையாளர் நாயகம் உட்பட காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், காணி அமைச்சு என்பவற்றைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்ட நடமாடும் சேவை முல்லைத்தீவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொக்கிளாய் மக்களின் குடியிருப்புக் காணிகளில் அத்துமீறி விகாரை அமைத்துவரும் பிணக்கானது முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்தக் காணிக்கு சரியான தீர்வு எட்டப்படும் வரை அவ்விகாரையின் கட்டுமானப் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்படுவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் காணி உரிமையாளர்களால் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.