செய்திகள்

கொக்குளாயில் அமைக்கப்படும் விகாரை குறித்து எதுவும் தெரியாது

முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்தர்களே இல்லாத கொக்குளாய் கிராமத்திலுள்ள தனியார் காணியொன்றை ஆக்கிரமித்து மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை குறித்து தனக்கேதும் தெரியாதென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்குரே தெரிவித்தார்.
இம் முறை கொண்டாடப்படவிருக்கின்ற வெசாக் பண்டிகை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இதன்போது நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் நோக்கமாகக் கொண்டு வடக்குத் தெற்கு இணைப்பை ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாணத்தில் அனைத்து மதத்தவர்களுமாக இணைந்து வெசாக் பண்டிகையைக் கொண்டாடவுள்ளதாக ஆளுநர் தெரிவித்திருந்த நிலையில், கொக்குளாய் பௌத்த விகாரை அமைப்புத் தொடர்பாக ஆளுநரிடம் ஊடகவியலாளரால் கேள்வியெழுப்பப்பட்ட போதே இந்த விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனக் கூறி ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து ஆளுநர் எழுந்து சென்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கொக்குளாய் கிராமத்தில் காலங்காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து தற்போது சிங்கள மக்களும் குடியமர்ந்திருக்கின்றனர். அவ்வாறு அங்கு குடியமர்ந்திருக்கின்ற மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தையே சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் தான் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விகாரையொன்றைக் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அங்கு பொது மக்களுக்குச் சொந்தமான தனியார் காணியொன்றையும் அடாத்தாகப் பிடித்து
அதிலேயே இந்த விகாரையையும் அமைத்து வருகின்றனர்.இவ்விகாரைக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினரான துரைராசா ரவிகரனும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென மாகாண சபையில் பிரேரனை கொண்டு வந்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
இங்குள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அடாத்தாகப் பிடித்து விகாரை அமைக்க முடியாதென்றும் ஆகவே இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சரும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந்த போதும் அங்கு விகாரை அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மதங்களுக்கிடையில் உறவையும் வலுப்படுத்தி அனைவருமாக இணைந்து செயற்படுவோம் என்று கூறுகின்றார்.
அவ்வாறாயின் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்தவிகாரை எதற்கு தனியார் காணியை ஆக்கிரமித்து எவ்வாறு விகாரை அமைக்க முடியும் என ஊடகவியலாளர்கள் ஆளுநரிடம் கேள்வியெழுப்பியபோது, அங்கு விகாரை அமைப்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதென்றும் இது தொடர்பில் ஆராய்ந்து பதில் கூறுவதாகவும் கூறி ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்த எழுந்து சென்றுவிட்டார்.
n10