செய்திகள்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் பதிவு நிறுத்தம்: மனோ கணேசன்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி, மெசஞ்சர் வீதி தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி தருமாறு இப்பகுதி பொதுமக்கள் பொலிசாரால் கோரப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள நிலைமை தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி, மெசஞ்சர் வீதி தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி தரவேண்டாம் என நான் இந்த பொலிஸ் பிரிவுக்குள்ளே வாழும் மக்களை, விசேடமாக சிறுபான்மை மக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரிவில் வாழும் மக்கள் மத்தியில் வீடு வீடாக பொலிஸ் பதிவு படிவங்கள் விநியோகிக்கப்பட்டதாக, இது தொடர்பில் பதட்டம் அடைந்த பொதுமக்கள் எமது ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பாளர்கள் மூலமாக எனக்கு இந்த விடயத்தை அறிய தந்துள்ளர்கள்.

இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு இந்த நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி நான் கூறியுள்ளேன். அது ஏற்றுக்கொண்டு அவர் உடனடியாக இந்த நடவடிகையை நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளார். இந்த பகுதிகளில் சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைக்கவே தமது பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் எனக்கு விளக்கம் அளித்தார்.

இது அவசியமற்ற வகையில் நமது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதால் இதை உடன் நிறுத்தும்படியும், சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேறு வழி முறைகளை கையாளும்படியும் அவருக்கு நான் கூறியுள்ளேன். எந்த காரணத்தை கொண்டும் இந்த நடவடிக்கை மேலும் எங்காவது நடைபெறுமானால் உடனடியாக அதை எனது அல்லது எமது கட்சி பணியாளர்களின் கவனங்களுக்கு கொண்டு வரும்படி பொது மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.