செய்திகள்

கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அங்கு அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக நாளை (3) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இரணை தீவு பங்குத்தத்தை அருட்தந்தை மடுத்தீன் அடிகளார் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பல கட்ட போராட்டங்களின் பின்னர் மீள் குடியேறிய எமது இரனை தீவு பகுதிகளில் உடல்களை அடக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கவலை அழிப்பதுடன் தங்களுக்கு மகிழ்சி இன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இரணைதீவு பகுதியானது நீரேந்து பிரதேசமாக காணப்படுவதனால் கொரோனா தொற்றுள்ள உடல்களை புதைப்பதனால் நீர் ஊடாக தொற்று பரவ வாய்புள்ளதாகவும் அண்மைக் காலமாகவே இரணை தீவு மக்கள் குடியேறி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் இம் முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதிலை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது 165 குடும்பங்கள் அட்டை பண்ணைகளை அமைத்து அங்கு வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகியுள்ளது.

எனவே மக்கள் அனைவரும் இணைந்து நாளைய தினம் புதன் கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதுடன் யாழ்பாண மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவுத்துள்ளார். -(3)