செய்திகள்

கொரோனாவும் தமிழர்களும்

யதீந்திரா

உலக வரலாற்றில் நெருக்கடிகள் புதிதல்ல. யுத்தங்களாலும் நோய்களாலும் காலத்திற்கு காலம் மனித குலம் அழிவுகளை சந்தித்திருக்கின்றது. ஒவ்வொரு அழிவுகளும் மனித குலத்திற்கு ஒவ்வொரு படிப்பினைகளை கொடுத்திருக்கின்றது. ஆனால் அந்த படிப்பினைகளிலிருந்து மனிதர்கள் எதைக் கற்றுக் கொண்டனர்? – என்பதுதான் கேள்வி. இந்த இடத்தில் ஜேர்மனிய சிந்தனையாளர் ஹெகலின் ஒரு கூற்றுத்தான் நினைவுக்கு வருகின்றது – வரலாற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்கின்றோம் என்றால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

கடந்த ஒரு நூற்றாண்டில் இரண்டு உலக மகா யுத்தங்களை மனித குலம் சந்தித்திருக்கின்றது. முதலாம் உலகமகா யுத்தம் போர்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போர் என்று  அழைக்கப்பட்டது. ஆனாலும் இரண்டாவது உலக மகா யுத்தம் ஒன்றிலிருந்து மனித குலத்தினால் தப்ப முடியவில்லை. இரண்டு உலக யுத்தங்களின் முடிவிலும், 110மில்லியன் வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த அழிவுகளிலிருந்து, மனித குலம் எதனைக் கற்றுக் கொண்டது? அப்படி எதனையாவது கற்றுக் கொண்டிருந்தால் அதன் பின்னர் அதிகாரத்திற்கான போர்களில் மனித குலம் ஈடுபட்டிருக்குமா?

PityOfWarLg

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னரான உலகம், முன்னரை விடவும் அதிகம் பிளவுபட்டது. மத அடிப்படை வாதங்களின் பெயராலும், இனங்களின் பெயராலும் போர்கள் தொடர்ந்தன. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போரின் முடிவிலும் மனிதர்களுக்கு அழிவுகளே மிஞ்சுகின்றன. ஒரு சிந்தனை மாற்றத்திற்கான தேவை உரணப்படுகின்றது. ஆனாலும் எதிர்பார்ப்பது போன்று மனிதர்கள் திருந்தவில்லை. மீண்டும், மீண்டும் அழிவுகளுக்கான ஒத்திகையிலேயே உலகத்தின் ஆற்றல் செலவிடப்படுகின்றது. சிரியா தொடக்கம் – மியன்மார் வரையில் எங்கும் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன. ஜக்கிய நாடுகள் சபையினால் எந்தவொரு போரையும் தடுத்து நிறுத்த முடியவில்லை – மக்களை காப்பாற்ற முடியவில்லை. ஒவ்வொரு போர்களும், மனிதர்கள் அவர்களது கடந்த கால வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான சாட்சிகளாகும். மனிதர்கள் திருந்திவிடக் கூடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களே வரலாற்றின் ஏமாளிகளாகின்றனர்.

கொரோனா பல புதிய விவாதங்களை தோற்றுவித்திருக்கின்றது. அதே வேளை, சில மாற்றங்களையும் நிர்ப்பந்தித்திருக்கின்றது. பிரான்ஸ் ஈராக்கில் நிலைகொண்டுள்ள அதன் படைகளை விலக்கிக் கொண்டிருக்கின்றது. நேட்டோ படையினரின் போர் ஒத்திகைகளும், அதற்கு எதிரான ரஸ்யாவின் ஒத்திகைகளும் பரபஸ்பரம் ஓய்வடைந்திருக்கின்றது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் தங்களை தாங்களே முடக்கிக்கொண்டன. இன்னும் பல மாற்றங்களை கொரோனா உந்தித்தள்ளலாம். ஆனாலும் ஈராக்கின் மீதான பொருளாதார தடையை நீக்குவதற்கு இன்னமும் அமெரிக்கா இணங்கவில்லை. ஈரான் பல நாடுகளிடமும் – ஜக்கிய நாடுகள் சபையிடமும் முறையிட்டிருக்கின்றது. அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த சில செனட்டர்களும் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். ஆனால் டிரம்ப், நிர்வாகம் இதுவரை அதற்கு சாதகமாக பதிலளிக்கவில்லை. அதே போன்று கியுபாவின் மீதான பொருளாதார தடையை, மீள் பரிசீலனை செய்யுமாறும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

கொரோனாவிற்கு பின்னரான புதிய உலக ஒழுங்கு தொடர்பான விவாதங்கள் அதன் ஆரம்ப நிலையில் இருக்கின்றன. உண்மையில் இன்றைய நிலையில் கொரோனா மருத்துவ உலகின் பிரச்சினைதான். ஆனால் இது முடிவுறும் போது, இது ஒரு புதிய உல ஒழுங்கை நிச்சயம் உந்தித் தள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உலக பொருளாதா ஒழுங்கில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். தற்போது இருக்கும் தராளவாத உலக ஒழுங்கை தொடர்ந்தும் பாதுகாக்க முடியுமா என்பதும் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கலாம். ஏனெனில் சதா எதிரிகளை கருத்தில் கொண்டு இயங்கும் உலக அதிகார சக்திகள் எவற்றாலும், தனது சொந்த மக்களை பாதுகாக்க முடியவில்லை. முக்கியமாக உலக வல்லரசான அமெரிக்கா இந்த விடயத்தில் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. அதன் பலம் பொருந்திய உளவு அமைப்புக்களால் விடயங்களை முன் கூட்டியே கணிக்க முடியவில்லை. அந்த வகையில் கொரோனா, இதுவரை எதுவெல்லாம் அரசுகளின் பலம் என்று கணிக்கப்பட்டதோ, அவையெல்லாம் உண்மையிலேயே பலம்தானா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. எல்லாவற்றையும் மீள் பரிசீலனைக்கும் – மீள் கட்டமைப்புக்கும் உள்ளாக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதிகம் – அதிகம் எல்லைகளை தகர்ப்பதே தாராளவாத உலக ஒழுங்கின் இலக்காகும். சுதந்திர வர்த்தகம் என்பதன் பொருள் அதுதான். ஆனால் கொரோனா தொற்று அதிகரித்த போது, எல்லைகளை மூடியே மக்களை காப்பாற்ற முடிந்தது. எந்தளவிற்கு எல்லைகளை மூட முடியுமோ, அந்தளவிற்கு மக்களுக்கு பாதுகாப்பு என்னும் நிலைமை உருவானது. இன்று எல்லைகள் மூடப்பட்ட ஒரு உலகத்திற்குள்தான் கொரோனாவிற்கு எதிரான போரில் மனித குலம் ஈடுபட்டுக் கொண்டிருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தன்னை ஒரு போர்க்கால ஜனாதிபதி என்று குறிப்பிட்டிருக்கின்றார். யாருக்கு – எந்த நாட்டுக்கு எதிரான போர் இது?

2

இலங்கைத் தீவும் அழிவுகளின் அனுபவங்களை போதுமான அளவிற்கு பெற்றிருக்கின்றது. 1971 மற்றும் 1989இல், இரண்டு தடவைகள் ஜே.வி.பியின் ஆயுத கிளர்ச்சியை எதிர்கொண்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தமிழர் உரிமைசார் அரசியல், ஆயுதப் போராட்டமாக பரிணமித்த பின்புலத்தில், இலங்கைத் தீவு முழுமையான ஒரு உள்நாட்டு யுத்தத்திற்குள் விழுந்தது. அதன் முடிவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு அனுபவங்களிலிருந்தும் இலங்கையின் ஆளும் வர்க்கம் எதைக் கற்றுக் கொண்டது? எதையாவது கற்றுக் கொண்டிருந்தால் கடந்த பத்தாண்டுகளில் பல ஆக்கபூர்வமான விடயங்களை சாதித்திருக்கலாம்.

மறுபுறமாக தமிழர் சமூகம் தனது கடந்த காலத்திலிருந்து எதையாவது கற்றுக் கொண்டிருக்கின்றதா? இப்போதும் கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிளவுண்டு, தனக்குத் தானே வேலிகளை போட்;டுக் கொண்டது. இயக்க மோதல்கள் – இன்றும் தொடரும் கட்சிகளின் மோதல்கள் – புலம்பெயர் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் – இவற்றினால் தமிழ் சமூகம் சாதித்தது என்ன? முள்ளிவாய்க்கால் அனுபவங்கள் போதும் தமிழ் சமூகம் தன்னை புடம்போட்டுக் கொள்வதற்கு – ஆனால் அது முடிவில்லை – ஏன்? கொரோனா அச்சத்தை விடவும் இறுதி யுத்தம் தமிழர்களுக்கு அதிகம் கற்றுக்கொடுத்திருந்தது. முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்த யாழ் சமூகம் தனக்குள் அடைகாத்துவரும் சாதித்திமிரை தூக்கியெறிய முடிந்ததா? தமிழ்-சாதித் திமிர் கலாசாரத்தால், தமிழ் சமூகம் அடைந்த நன்மைகள் என்ன? அது எந்த வகையில் தமிழரின் சமூக அரசியல் பொருளாதார வாழ்விற்கு நன்மை சேர்க்கின்றது? இன்றும் வேட்பாளர்கள் நியமனங்கள் சாதிகளின் அடிப்படையில்தானே தீர்மானிக்கப்படுகின்றன? கடந்த கால வரலாற்றிலிருந்து, தமிழர் சமூகம் முக்கியமாக யாழ்மைய சமூகம் கற்றுக் கொள்ள முற்பட்டிருந்தால், இவ்வாறான தவறுகள் எல்லாம் எவ்வாறு தொடர முடியும்? ஏனென்றால் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ள எவருமே தயாராக இல்லை என்பதே உண்மை. நாம் – நம்மை திருத்திக் கொள்வதற்கு தயாராக இல்லாதபோது மற்றவர்களிடமிருந்து எவ்வாறு மனமாற்றங்களை கோர முடியும்?

அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச – மிருசுவில் படுகொலையில் தண்டிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்திருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, கொரோனா காலத்திலும் மனிதர்கள் திருந்தவில்லையே என்று சிலர் ஆதங்கப்படுவதை காண முடிந்தது. கோட்டபாய தனது கட்சியை இன்னும் பலமாக எவ்வாறு நிமிர்த்தலாம் என்னும் அடிப்படையில் சிந்திக்கும் ஒரு சிங்கள அரசியல்வாதி. எனவே அவர் அவ்வாறு நடந்துகொண்டது ஆச்சரியமான ஒன்றல்ல. கொரோனா அவரது நடத்தையில் இதுவரை எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அது ஒரு சான்று. எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழும் என்பதில் நம்பிக்கை வைக்க முடியாது. ஏனெனில் அப்படியான அதிசயங்கள் இதுவரை சிங்கள அரசியல் வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. ஆனால் இந்தப் பத்தியாளரைப் பொறுத்தவரையில் முதலில் தமிழர்களுக்குள் நிகழ வேண்டிய மாற்றங்கள் தொடர்பில்தான் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில்தான் அதிகம் உரையாட வேண்டும். ஏனெனில் தமிழ் சமூகம் கடந்த காலத்தின் குப்பைகளை பெருமையுடன் சுமந்து கொண்டிருக்கின்றது. முதலில் அந்தக் குப்பைகளை அகற்றி, தமிழர்களை தங்களை தாங்களே சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கொரோனாவின் பிடியிலிருந்து தப்புவதற்கான முக்கியமான வழிமுறைகளில் ஒன்று, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது. இன்று இந்த நடைமுறையே உலகெங்கும் பின்பற்றப்படுகின்றது. வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, கைகளை, கால்களை கழுவிக் கொள்ளும் பழக்கம் – தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பழங்காலப் பழக்கம். ஆனால் கைகளை கழுவிக் கொண்டு, பல குப்பைகளை மனதில் சேமித்துக் கொள்வதால் கொரொனாவிலிருந்து தப்பலாம், ஆனால் முன்நோக்கி பயணிப்பதற்கான ஆற்றலை பெறுவதற்கான முயற்சியில் ஒரு போதுமே தமிழ் சமூகம் வெற்றிபெற முடியாது. எழுபது வருடங்களுக்கு மேல் அரசியல் பயணம் செய்தும், பல ஆயுத இயக்கங்கள் போராடியும் – பல கட்சிகள் இருந்தும் – தமிழர்களால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதனையுமே அடைய முடியவில்லையே! – அது ஏன்? – இந்தக் கேள்விக்கான பதிலை தேடிக் கொள்வதற்கான சிந்தனை மாற்றமொன்றை கொரோனா தமிழர்களுக்குள் உந்தித்தள்ளுமா? முள்ளிவாய்க்கால் தமிழர்கள் திருந்துவதற்கான போதிய வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. இப்போது கொரோனா!