செய்திகள்

கொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம்

யதீந்திரா

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மனிதரின் வாழ்வு நிர்மூலமாகவிடலாம் என்னும் ஒரு துயரநிலை தோன்றியிருக்கின்றது. மனிதர்களின் வாழ்வு இவ்வளவுதனா என்னும் கேள்விதான் ஒவ்வொருரையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு வளம்நிறைந்த நாடு – இத்தாலி – செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. எல்லா இடங்களிலும் மரண ஓலம். கடவுள் மீதான மனித நம்பிக்கை அவர்களின் கண் முன்னாலேயே சிதைந்து கொண்டிருக்கின்றது. கடவுளின் இடங்களுக்கே செல்வது பாதுகாப்பில்லை என்னும் போது, இதுவரை அந்த இடங்கள் தொடர்பில் மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கையின் அர்த்தம் என்ன என்னும் கேள்வி எழலாம்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 24000தை தாண்டிவிட்டது. வரலாற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் யுவா நுவால் ஹராரியின் வார்த்தையில் கூறுவதானால் கடந்த ஒரு நூற்றாண்டில் மனித குலம் கண்ட மிகவும் மோசமான நோய்த் தொற்று என்று இதனைக் கூறலாம். மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேச முடியாது. ஒருவர் மற்றவரை தொட்டுப் பேச முடியாது. ஒருவருக்கு மற்றவர் கைலாகு கொடுக்க முடியாது. ஒருவர் தொட்ட உணவை மற்றவர் உண்ண முடியாது. மொத்தத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்களை சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்க்கும் நிலைமை. கடந்த ஒரு நூற்றாண்டில் இது போன்றதொரு அவலம் ஒரு போதும் நிகழ்ந்ததில்லை. 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் முழு ஜரோப்பாவும் முதல் முதலாக முடங்கியிருக்கின்றது.

social distance

ஒரு விடயம் நமக்கு புதிதாக அறிமுகம் ஆகின்ற போதுதான், இதற்கு முன்னர் உலகில் என்ன நிகழ்ந்தது? இது போன்ற நிலைமையை உலகம் இதற்கு முன்னர் எதிர்கொள்ளவில்லையா – என்னும் கேள்விகள் தலை நீட்டுகின்றன! காலத்திற்கு காலம் இது போன்ற வைரஸ்கள் மனித குலத்தை அழித்திருக்கின்றது. அதிலிருந்து தப்பி, எஞ்சியவர்கள்தான், இப்போதைய மனித குலம். 14ம் நூற்றாண்டில் கறுப்பு மரணம் (Black Death) அல்லது கிறேட் பிளேக் என்னும் நோய்த் தொற்றினால் 75 தொடக்கம் – 200 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். இங்கிலாந்தில் பத்திற்கு நால்வர் என்னும் அடிப்படையில் உயிரிழந்தனர். ஜரோப்பாவில் 30 தொடக்கம் 60 விகிதமான மக்கள் இறந்துபோயினர். 1520ல் சின்னம்மை தொற்றினால் மத்திய அமெரிக்கப் பகுயிலுள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இறந்துபோயினர். 1918இல் புளு வைரஸ் தொற்றினால் ஒரு வருடத்தில், ஏறத்தாள 100 மில்லியன் மக்கள் இறந்துபோயினர். இந்திய மொத்த சனத் தெகையில் 5 விகிதமான மக்கள் இறந்தனர். மீண்டும் 1967இல் சின்னம்மை தொற்றினால் 15 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் 20 மில்லியன் மக்கள் இறந்தனர். இறுதியில் தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக சின்னம்மை நோயை மருத்துவ ஆராய்ச்சி முற்றிலுமாக தோற்கடித்தது. 2002இல் சீனாவின் பொசான் நகரத்தில் சார்ஸ் என்னும் புதிய வகை வைரஸ் தொற்று பதிவானது. தற்போது வூகான் மானிலத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ்சிற்கும் சார்ஸ் வைரசிற்கும் ஒத்த தன்மைகள் இருக்கின்றனவா என்றவாறான ஆய்வுகளும் நடைபெறுகின்றன. 2014ல் மீண்டும் உலகம் எபோலா என்னும் புதிய வைரஸ் தொற்றால் அச்சுறுத்தப்பட்டது. இப்படி பல வகையான வைரஸ் தொற்றுக்களால் மனித குலம் காலத்திற்கு காலம் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றின் தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் கொரோனா. ஆனாலும் முன்னரைப் போன்றில்லாமல் முழு உலகத்தையும் புதிய வகையில் இந்த வைரஸ் தொற்று அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இன்றுவரை இதன் தாக்கம் குறையவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரைல் இது ஒரு புதிய சவால். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இலங்கையில் எவருமே உயிரிழக்கவில்லை. இதுவரை 102இற்கு மேம்பட்டவர்கள் கொரோனா தொற்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர் தாயகப் பகுதியை பொறுத்தவரையில் இதுவரை இரண்டு பேர்தான் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கில் ஒருவர் கிழக்கில் ஒருவர். இது ஒரு ஆறுதலான செய்தி. சிறிலங்கா அரசாங்கம் கொரோனா தொற்றை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடு;த்து வருகின்றது. இதன் மூலம் இந்த தொற்று வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுப்பப்பட்டிருக்கின்றது என்பது உண்மைதான்.

உலகில் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து. பிரான்ஸ் ஜேர்மனி போன்ற நாடுகளிலேயே, இந்த வைரஸ் தொற்று பெரும் நெருக்கடியாக மாறியிருக்கின்றது. இதுவரை வெளியான தகவல்களின்படி இந்த வைரஸ் தொற்றை மருத்துவ ரீதியில் கட்டுப்படுத்தக் கூடிய எந்தவொரு ஏற்பாடும் இல்லை. சமூக இடைவெளியை அதிகரிப்பதன் ஊடாகவே இந்தத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்னும் நிலைமையை காணப்படுகின்றது.

corona-4924608_1280

இந்த பின்புலத்தில்தான் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பத்திலேயே பாடசாலைகளை முடியது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களை முடக்கியது. இறுதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவன் ஊடாக, மக்களை வீடுகளுக்குள் முடக்கியது. இந்த முறைமைகள் அனைத்தும் உலகின் பல பாகங்களிலும் தற்போது நiமுறையில் இருக்கின்ற முறைகள்தான். இதனைத் தவிர இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்கு வேறு வழிமுறைகள் இல்லை.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், அரசாங்கம் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் பொது மக்கள் ஒத்துழைக்காது விட்டால், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. அரசாங்கமும் மக்களும் ஒரு நேர் கோட்டில் பயணித்தால்தான் இந்த தொற்றிலிருந்து தற்காலிகமாக தப்ப முடியும். இதிலிருந்து நிரந்தரமாக தப்புவது என்பது, இதற்கான மருத்துவ வெற்றியினால் மட்டுமே சாத்தியப்படும். அதுவரை ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் இந்த விடயங்களை பார்க்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. எனெனில் இது மனிதர்கள் அனைவரதும் பிரச்சினை. சிறிலங்காவல் ஏற்கனவே புராயோடிப்போயுள்ள இன பாகுபாடுகளின் வழியாக இந்தப் பிரச்சினைகளை பார்கலாமா? இன்றைய நிலைமையில், சிறிலங்காவில் எவர் பாதிக்கப்பட்டாலும், அது இந்த அனைத்து மக்களுக்கான பாதிப்பு என்னும் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் இந்த விடயத்தை நோக்க வேண்டும்.

சீனாவில் வூகான் என்னும் பெயரில் ஒரு மாகாணம் இருப்பது நேற்றுவரை எவருக்கும் தெரியாது. ஆனால் இன்று உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தெரிந்துவிட்டது. ஒரு வைரஸ் அதனை தெரியப்படுத்திவிட்டது. உலகில் ஏதோவொரு மூலையில், ஒரு இறைச்சி சந்தையில் ஏற்படும் கிருமி வெடிப்பானது, உலகு முழுவதையும் பாதிக்கக் கூடிய என்னும் உண்மை, இப்போது நம் கண் முன்னாலிருக்கின்றது. உலகில் எங்கோ நிகழுகின்ற விடயங்கள் ஒவ்வொன்றும், உலகின் இன்னொரு கோடியை தாக்கக் கூடியதாக இருக்கின்ற போது, தெற்கில், வடக்கில், கிழக்கில் ஒவ்வொருவரும் பாதிக்கப்படும் போது, அது நம் அனைவருக்குமான பாதிப்பாகும். இந்தப் புரிதலோடும், சிரத்தையோடும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும் மதத் தலைவர்களும் இந்த விடயத்தை நோக்க வேண்டும். இது நம் அவைருக்குமான பிரச்சினை என்னும் புரிதலோடு இந்த விடயத்தை அணுகினால் இதனை விரைவில் மக்களாக வெல்ல முடியும். இதனை இன்னொரு வகையில் சொல்வதானால், இது நமக்கு பழக்கமான இன அரசியலை கடந்து சிந்திக்க வேண்டிய தருணம்.

Corona_layers_SEv1_grey_25_1_LARGE

தற்போதைய நிலையில் உலகளவில் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவதற்கு ஒரேயொரு வழிமுறைதான் இருக்கின்றது. அதாவது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதற்கான சமூக இடைவெளியை (ளுழஉயைட னுளைவயnஉந) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. இதன் பொருள் சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகரிப்பது என்பதல்ல. மனிதர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்களை குறைப்பதும் தேவைப்பட்டால் இல்லாமல்லாக்குவதன் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்னும் அடிப்படயில்தான் இந்த சமூக இடைவெளி என்னும் கருத்து பிரயோகிக்கப்படுகின்றது. மக்கள் மேலும் மேலும் ஒன்றிணைந்து செயலாற்றுதன் ஊடாகத்தான் ஒட்டுமொத்த மக்களுக்கான பிரச்சினையை, அனைவருமாக ஒன்றிணைந்து வெல்ல முடியும். இந்தக் கட்டுரை ஒரு நோய்த் தொற்றை தடுத்து, நம் அனைவரையும் காப்பாற்றுவதற்கான பொறிமுறை என்னும் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்கின்றது. வழமையான அரசியல் புரிதலால்; இந்தக் கட்டுரையை அணுகினால் அது தவறாகும். இந்தக் கட்டுரையாளளின் அரசியல் நிலப்பாடுகள் வேறானது.