செய்திகள்

கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் ஒழுங்குவிதிகள் வெளியானது: தினமும் காலை 5.30 -க்கு உடல்கள் இரணைதீவு நோக்கி கொண்டு செல்லப்படும்

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கைச்சாத்துடன் வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிக்காட்டல்களின் பிரதிகள் 16 தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இரணைதீவில் அதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு அங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நபரொருவரின் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டுமானால் அவரின் உறவினர்கள் தவறாது சுகாதார பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும்.

உயிரிழந்த நபரின் சடலத்தை இனங்காண்பதற்காக இருவர் மாத்திரம் இரணைத்தீவிற்கு செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், இதன்போது முழுமையான சுகாதார பாதுகாப்பு முறை​​ கடைக்கப்பிடிக்கப்படும்.

அதன்படி, ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு மற்றும் வெலிக்கந்தையில் இருந்து இரணைத்தீவை நோக்கி கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

அதேபோல், சடங்களை அடக்கம் செய்யும் போது அல்லது பெட்டியில் சடலத்தை வைக்கும் போது புகைப்படம் அல்லது காணொளி பதிவு செய்தல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் பெட்டியில் வைக்கப்பட வேண்டும் எனவும் எந்த காரணத்திற்காகவும் அதனை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)