செய்திகள்

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவேண்டும்; நீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறும்போது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கக்கூடிய வேலைத் திட்டமொன்றை தயார்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பேரணிகள், ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்தமாதம் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல்ராத் ஹுசெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது கொழும்பிலுள்ள ஐ.நா.வின் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது.

வீதிகளை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தின் காரணமாக மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராகத் தாக்கல் செயய்ப்பட்ட வழக்கின் விசாரணையின்போதே பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இதனைத் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறிய நீதிபதி, இரு நாட்கள் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கடந்த இரு நாட்கள் நடத்தப்பட்ட பேரணிகள் பொலிஸாரின் அனுமதியுடன் நடந்ததாகவும் விமல் வீரவன்ஸ குழுவினரால் நடத்தப்பட்ட பேரணிகளுக்கு அனுமதி பெறப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பொலிஸாரின் அனுமதியைப் பெறாமல் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது சட்டத்தை மீறும் செயலென்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ஸ, புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் கொழும்பு லிப்டன் சந்தியில் வீதிகளை வழிமறித்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்த வழக்கின் விசாரணை ஜூன் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

n10