செய்திகள்

கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்கள் தொடர்பாக மாற்று வழிமுறைகள்

மேல் மாகாணத்தின் 3 மாவட்டங்களும் கொரோனா வைரஸ் அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்களை சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியாதென சுகாதார அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
எவ்வாறாயினும்  அவர்களை தமது ஊர்களுக்கு திரும்பும்வரை மாற்று நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் இன்று நடைபெற்ற ஆளுங்கட்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சிக் கூட்டம் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதியாக பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

ஏற்கனவே இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பும்வரை மாற்று வழிமுறைகள் குறித்து ஆராயும் யோசனையை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பின்புலத்திலேயே ஆளுங்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான் இந்த விடயத்தை கலந்துரையாடினார்.

மாற்று வழிமுறைகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பிரகாரம்; உடனடியாக பரிசீலிப்பதாக அரசாங்கத்தின் சார்பில் உறுதியளிப்பட்டுள்ளது.  -(3)