செய்திகள்

கொழும்பில் பணியகத்தை திறக்கிறது சீன அபிவிருத்தி வங்கி

சீன அபிவிருத்தி வங்கியின் பணியகம் ஒன்று விரைவில் கொழும்பில் திறக்கப்படவுள்ளது.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சீன அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஹு ஹுவாய்பாங்கிற்கும் இடையில் நேற்று பீஜிங்கில் நடந்த சந்திப்பிலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

சீனா சென்றுள்ள  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று  மூன்று முக்கிய வங்கிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் பதில் தலைவர் டனி அலெக்சான்டருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, வரும் ஜூலை மாதம் அந்த வங்கியின் அதிகாரிகள் குழுவொன்றை   அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவுளை சீனாவின் எக்சிம் வங்கியின் தலைவர் லியூ லியாங்கையும்   பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, அம்பாந்தோட்டை துறைமுகம் அருகே கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்குவதற்கான சீனாவின் முதலீடுகளை   பிரதமர் கோரினார்.

அத்துடன் அம்பாந்தோட்டை, துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றை இயக்குவதற்கு சீன நிறுவனங்களின் உதவியையும் அவர் கோரியுள்ளார்.

எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்புகளில் பேசப்பட்டுள்ளது.

சீன முதலீட்டாளர்களை  முதலீடுகளைச் செய்வதற்கு இந்த வங்கிகள் ஊக்கமளிப்பதாக இணங்கியுள்ளன.

ஆசியாவின் பொருளாதார மற்றும் நிதி கேந்திரமாக சிறிலங்காவை மாற்றியமைக்கும் முயற்சிக்கு முடிந்தளவு ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதாக சீன வங்கிகளின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

 

n10