செய்திகள்

கொழும்பில் பயணப்பொதில் இருந்த சடலம் தொடர்பான தகவல் வெளியானது: கொலையை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

கொழும்பு டேம் வீதி பகுதியில் பயணப் பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த பெண்ணை கொலை செய்து அந்த பயணப் பொதியில் வைத்த சந்தேகநபர் பதுல்கும்புரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவரின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப பொலிஸ் பரிசோதகர் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹங்வெல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருந்த போது அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அந்த சடலத்தை சந்தேக நபர் கொழும்புக்கு கொண்டு சென்று வைத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். -(3)