செய்திகள்

கொஸ்லாந்தை மண்சரிவு: மீட்புப் பணிகளை கைவிட இராணுவம் தீர்மானம்?

இலங்கையயில் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்தை மீரியாபெத்தையில் நிலச்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து இதுவரையில் பதினொரு சடலங்களே மீட்கப்பட்டிருப்பதாக, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் கூறியுள்ள அதேவேளையில் மீட்புப் பணிகளுக்கு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து போதிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அதிக ஆழத்தில் இடிபாடுகளும், காணாமல் போயிருப்பவர்களும் புதையுண்டிருப்பதுடன், சடலங்கள் உருக்குலைந்திருப்பதனால் தேடுதல் நடத்துவதில் பயனில்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுவதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் உதவிக்கு வந்திருந்தார்கள். அவர்களின் உதவியோடு இரண்டு சடலங்களைக் கண்டுபிடித்தோம். ஆனால் இன்று நான்குபேர் மாத்திரமே வந்திருந்தார்கள். அதேநேரத்தில் சுமார் 100 அடி ஆழத்தில் புதையுண்டிருக்கின்ற இடிபாடுகளையும் உருக்குலைந்துள்ள சடலங்களையும் மீட்பதற்காக தேடுதல் நடத்துவதில் பயனில்லை என்றும் அவர்கள் உணர்கின்றார்கள்” என்றார் மனோ பெரேரா.

“அவர்களுடைய கருத்தை நாங்கள் கவனத்திற் கொண்டிருக்கின்றோம். மீட்புப் பணிகள் இன்னும் கடினமானதாகவே இருக்கின்றது. கனரக வாகனங்களை முழு அளவில் பயன்படுத்த முடியவில்லை. இடிபாடுகளும் காணாமல் போயிருப்பவர்களும் புதையுண்டிருக்கலாம் என்று நாங்கள் கருதும் இடத்தையும் நாங்கள் இன்னும் சென்றடையவில்லை. இன்னும் இரண்டொரு தினங்கள் தேடுதல் நடத்திய பின்னர் தொடர்ந்து தேடுதல் நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்” என்றார் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா.

அதேவேளை, பொதுமக்கள் தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்திற்கு உதவி செய்வதற்கும், அவர்களுடன் ஒத்துழைப்பதற்கும் தயாராக இருக்கின்ற போதிலும் இராணுவம் சரியான முறையில் பொதுமக்களின் உதவியை நாடவில்லை என்று கொஸ்லாந்தையைச் சேர்ந்த சமூக சேவையாளரும், ஹல்துமுல்ல பிரதேச சபை உறுப்பினருமாகிய செல்வரட்னம் சிறிகாந்தன் கூறுகின்றார்.

”நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் எங்கு வீடுகள் இருந்தன, எங்கு கோவில் இருந்தது எங்கு மக்கள் அதிகமாக வசித்தார்கள். இடிபாடுகளும் வந்தடைந்திருக்கக் கூடிய இடம் எது என்பதை அந்தப் பகுதியில் வசித்தவர்களே நன்கறிவார்கள். இடைத்தங்கல் முகாமில் இளைஞர்கள் காலையில் இருந்து வேலையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். காணாமல் போயிருப்பவர்கள் 38 பேரில் இதுவரையில் 11 சடலங்களையே கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

இவற்றில் 7 சடலங்கள் பொதுமக்களின் உதவியுடனேயே கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. காணாமல் போயிருப்பவர்களின் சடலங்களைக் கண்டுபிடித்து இறுதிக் கிரியைகளைச் செய்ய வேண்டும். எதிர்கால நன்மைகளுக்காகவும் நட்டயீடு உட்பட்ட கொடுப்பனவுகளுக்காக அவர்களுடைய மரணங்கள் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதைப் பொதுமக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்” என்றார் ஹல்துமுல்லை பிரதேச சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமாகிய செல்வரட்ணம் சிறிகாந்தன்.