செய்திகள்

கோட்பாட்டு அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளின் அவசியம்

– லோ . விஜயநாதன்

சிறிலங்காவின் 67வது சுதந்திர தினத்தை ஆடம்பரமற்ற வகையில் அமைதியான முறையில் சர்வதேச வல்லரசுகளின் வாழ்த்துகளுடன் தமிழ் இனத்துக் கெதிரான இனவழிப்புப் போரின் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் மீண்டும் ஒரு வெற்றியை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் சிங்களதேசம் கொண்டாடி முடித்துள்ளது.

Nisha-Biswal-TNAசிங்களதேசத்தின் ஆட்சிமாற்றத்தினூடாக வல்லரசு நாடுகள் முன்னெடுத்து வரும் தமது சர்வதேச பூகோள நலன்சார் விரிவாக்கல் திட்டங்களுக்கு மீண்டும் தமிழ் மக்கள் பலிக்கடாவாக்கப்பட்டு விட்டாரோ என்ற ஐயுறவை தற்போது நடந்துவரும் சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.

வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று ஒரு கிழமைக்குள் மங்களசமரவீரவின் இரண்டு நாள் உத்தியோக பூர்வ இந்திய விஜயமும் அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலர்கள் அமைச்சராகிய தகோ ஸ்வைர் அவர்களின் இலங்கைக்கான விஜயமும் இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் தெற்காசியாவிற்கான பிரதி இராஜாங்க அமைச்சர் நிசா பிஸ்வால் மற்றும் பொது நலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ்சர்மாவின் சிறிலங்காவிற்கான விஜயமும் அவர்களின் சந்திப்புக்களும் உரையாடல்களும் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய நிகழ்வுகளாக உள்ளன.

அதுவும் நிசா பிஸ்வால் சிறிலங்காவில் இருந்த காலகட்டத்தில் தான் கமலேஸ்சர்மாவின் இலங்கை விஜயம் அமைந்திருந்ததுடன் அவர்கள் இருவரும் ஒரே விமானத்திலேயே சிறிலங்கா விஜயத்தை முடித்துக் கொண்டு புதுடெல்லி நோக்கி பயணித்தார்கள் என்பதும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இந்த விஜயங்களை அண்டியும் அவற்றை தொடர்ந்தும் வெளிவந்த ஊடக செய்திகள் குறிப்பாக சர்வதேச ஊடக செய்திகள் சிறிலங்காவின் பாராளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் புதிய கூட்டரசு அதில் வெற்றியீட்டி ஸ்திரமான ஆட்சியை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அழுத்தியுரைக்கப்பட்டதுடன் புதிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கப்படுவதை தாமதப்படுத்தி புதிய அரசாங்கத்தின் உள்ளக விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. நிசா பிஸ்வாலின் இலங்கைக்கான விஜயத்தின் ஒரே நோக்கம் இதற்காகத்தான் தான் இருந்தது என்பதை வட மாகாண முதல்வர் சி. வி விக்னேஸ்வரன் நேற்று செவ்வாய்க் கிழமை இனப்படுகொலை தீர்மான உரையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் முதல் அமெரிக்காவின் முன்னாள் பிரதி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் வரை பல அரசியல் முக்கியஸ்தர்களும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

LK811Aமறு புறத்தே சிங்களதேசம் மிகவும் சாதுரியமாக காய்களை நகர்த்தி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எப்படி தமிழன் என்று கூறி லக்ஸ்மன் கதிர்காமரை வைத்து தமிழ் இனத்தை சர்வதேசரீதியில் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வீழ்த்தினார்களோ அதே பாணியில் தமிழ் உச்சநீதிமன்ற நீதியரசரான கனகசபாபதி சிறிபவனை பிரதம நீதியரசராக்கி அதன் மூலம் இலங்கையின் நீதித்துறை வீழ்ச்சியடைந்து விடவில்லை என்று நிரூபிக்க முற்பட்டுள்ளார்கள். இதையே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் பிரத மநீதியரசர் மொகான் பீரிஸை பதவி விலக்கியமை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது பின்வருமாறு கூறியிருந்தார். அதாவது, சிறிலங்காவில் நீதித்துறையின் நம்பக்கத்தன்மையை மீள நிலைநாட்டுவதற்கு துரிதமான நடவடிக்கைகளை எடுக்காவிடின் இலங்கையின் ஆயுதப்படைகளும் ஏனைய பொது மக்களும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராவதற்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும் எனக் கூறியிருந்தார்.

கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள தமிழ்க் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை கொடுப்பதற்கோ அல்லது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு தமிழ் ஆளுநர்களை நியமிப்பதற்கோ மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கோ அல்லது அவர்களது சமூக பொருளாதார வலுவூட்டலுக்கோ எந்த நன்மையினையும் அளிக்கமுடியாத உயர்பதவிகளுக்கு தமிழர்களை நியமித்து அவர்களின் திறமைகளையும் புகழ்களையும் தமக்கு சார்பாக பயன்படுத்த முனைந்திருக்கிறார்கள். சிங்களதேசம் சுதந்திரத்துக்கு முன்னரும் சரி பின்னரும் சரி தொடர்ச்சியாக செய்துவரும் ஒரு அரசியல் தந்திரமாக இது காணப்படுகிறது.

இத்தனைக்கும் மத்தியில், தமிழ் மக்களினால் கடந்த 43 வருடங்களாக கரிநாளாகவும் தம்மீதான அடக்குமுறைக்கு வித்திட்ட நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, பகிஷ்கரிக்கப்பட்டு வந்த இலங்கையின் சுதந்திர தினத்தில், இந்த பகிஷ்கரிப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட அதே கட்சியை சேர்ந்த அன்று இந்த தீர்மானத்துக்கு முழு ஆதரவாக செயற்பட்டவர்கள் இம்முறை கலந்து கொண்டமை தமிழ் மக்களின் நெஞ்சைப் பிளக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தாம் கலந்து கொண்டதற்கு இவர்கள் கூறிய காரணமோ நகைப்புக்கிடமாகவுள்ளது. அதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ்மக்களின் எதிர்காலம் புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சுதந்திர தினவிழாவில் பங்கேற்றதாக கூறியுள்ளார்கள். 1948க்கு பின்னர் எத்தனை அரசாங்கங்கள் வந்தன, எத்தனை சிங்களத் தலைமைகள் வந்தனர். அவர்களை எத்தனை வாக்குறுதிகளை வழங்கினார்கள், எப்படியெல்லாம் தமிழ் தலைமைகளை ஏமாற்றினார்கள் , எத்தனை ஒப்பந்தங்களை கிழித்தார்கள் எரித்தார்கள் என்பவற்றையெல்லாம் நேரடியாக பார்த்தவர்கள், ஜனாதிபதிக்கு முன்பாக முதலமைச்சராக பதவியேற்றதால் வட மாகாணசபை இயங்க முடிந்ததா என்பதை பட்டுணர்ந்தவர்கள், தமிழ் மக்களுக்கு சாதகமான அரசாங்கம் அமைந்துள்ளது என்று இன்று கூறுகிறார்கள்.

Sampanthan_Ranilஎந்த மாற்றமுமே நிகழாமல் அடுத்த மூன்று மாதகாலங்களில் யார் ஆட்சிக்கு வருவாரோ என்பது தெரியாத நிலையில் எப்படி இவர்கள் தாங்கள் பங்குபற்றியதை நியாயப்படுத்த முடியும். சிறிலங்காவின் 67வது சுதந்திர தினத்தில் பங்குபற்றியவர் அன்று 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சிங்கக் கொடியை ஏந்தியதால் எந்த அரசியல் ராஜதந்திர நன்மை கிடைத்தது?

நாம் முதலில் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது தமிழ் மக்களின் அபிலாசைகள் (aspirations ) மற்றும் இயல்பு நிலை (normalcy) என்பவற்றுக்கிடையேயான வித்தியாசம் தான் அது . தமிழ் மக்களின் அபிலாசை என்பது தமிழ்த் தேசியம் , தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட தன்னாட்சிக் கோட்பாடாகும். இயல்பு நிலை என்பது சிங்களம் அக்கோட்பாட்டை சிதைக்கின்ற வகையில் காலத்துக்குக் காலம் தமிழ் மக்கள் மீது ஏவிவிடுகின்ற ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான ஒரு கோரிக்கையாகும். தமிழ் மக்களோ தமக்கான இறுதித் தீர்வை அல்லது கோட்பாட்டை அடைவதற்கு முதலில் இந்த இயல்பு நிலை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ltte_slaஒரு காலத்தில் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் வாயிலாக பலமாக இருந்த போது எந்தவொரு பேச்சு வார்த்தைக்கும் முற்கோரிக்கையாக (pre-condition) தமிழர் தாயகத்தில் இயல்பு நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டு அவை செயற்படுத்தப்பட்டும் உள்ளன. ஆனால் சிங்கள தேசம் ஒரு போதும் முழுமையான இயல்பு நிலையை தமிழர் தாயகத்தில் எப்போதும் ஏற்படுத்தியதில்லை. இயல்பு நிலை ஏற்படுத்தல் என்பதை தமிழ் மக்களின் கோரிக்கையை வலுவிழக்கும் ஒரு உத்தியாக சிறிதளவு தளர்த்துவதும் பின் மிகக் கடுமையாக இறுக்குவதுமாகவே காலம் காலமாகப் சிங்கள அரசு செயற்ப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட போகின்றது, மாற்றம் வரப்போகின்றது என்ற சரணாகதி அரசியலை தமிழ் தலைமைகள் முன்னெடுப்பார்களேயானால் அது முழுத் தமிழினத்தின் அழிவிற்கே வழிவகுக்கும்.

இவற்றுக்கிடையே தமிழ் தரப்பில் சில குறிப்பிடத்தக்க நகர்வுகளும் இக்காலப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் உணரக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான இலங்கை – இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட இந்திய மத்திய அரசின் வேண்டுகோளை புறம்தள்ளி பின்வருமாறு கருத்து கூறியிருந்தார். அதாவது இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் நிலைமை இதுவரை சீராகவில்லை. இராணுவம் பெருமளவில் இன்னமும் தமிழர் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்றது. எனவே தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழ் அகதிகளை அனுப்புவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று கூறியிருந்தார்.

இதேவேளை பிரித்தானியாவில் சென்னை பல்கலைகழக பேராசிரியர் ராமு மணிவண்ணன் அவர்களின் “இலங்கை – யானையை மறைத்தல் – இன அழிப்பு, போர் குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக் கெதிரான குற்றங்களை ஆவணப்படுத்துதல்” என்ற நூல் வெளியீடும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கமும், மற்றும் பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களுடனான தமிழ் தரப்புகளின் கலந்துரையாடல்கள் ஆகியவை கவனிக்கத்தக்கவை. குறிப்பாக, பிரித்தானியவில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இக்காலகட்டத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

219539219Tamil-protest-in--London--002கடந்த காலங்களில் இலங்கைக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற கட்சிகளின் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விடயங்களில் மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டிருந்தது. இது பிரித்தானியா கடந்த காலங்களில் சிறிலங்காவுக்கு எதிரான சில நகர்வுகளை எடுப்பதற்கு தூண்டியது. தற்போதைய காலகட்டமானது பிரித்தானியா எதிர்வரும் மே மாதம் அளவில் ஒரு பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்க தயாராகிவரும் தருணமாகும். அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கைக்கெதிரான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான விசாரணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் தருணமுமாகும். இத்தகைய ஒரு காலகட்டத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மிகவும் செயற்திறனுடன் கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய கருத்தரங்குகளையும் மிகப் பெரியளவிலான ஒரு மக்கள் திரட்சிப் (போதியகால அவகாசத்துடன், எல்லோரையும் அணிதிரட்டக் கூடிய ஒரு நாளில்) போராட்டத்தையும் நடத்தி தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பிரித்தானியக் கட்சிகளின் முன்பாக தமது கொள்கைகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். தமிழ் மக்கள் பெருமளவில் வதியும்ஏனைய நாடுகளிலும் இப்படியான முன்னெடுப்புக்களை புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் மேற்கொண்டு அந்த நாடுகளின் கவனத்தை எமது பிரச்சனையை நோக்கி ஈர்க்கவேண்டும். இதுவே அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கங்களை உண்டு பண்ணி சர்வதேச அளவிலான நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும்.
மாறாக, வல்லரசு நாடுகள் தமது நலன்சார் நோக்கங்களை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தமிழ் தரப்பு நம்பியிருந்தால் அது எம்மை நாமே முடக்குவதற்கே வழிவகுக்கும்.

UN SL inquiryமுன்னெடுக்கப்பட்டுவரும் போர்க்குற்ற விசாரணை அறிக்கை அல்லது அதன் வெளியீடு இலங்கையின் ஆட்சி மாற்றத்தால் அல்லது புதிய ஆட்சியின் சில நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட முடியும் என்றால், இந்த விசாரணை எந்தளவுக்கு நேர்மையானது என்பதைப்பற்றி தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். இதுதான் உண்மை நிலை என்றால், ஆட்சி மாற்றம் நிகழாமல் இருந்து இருந்தால் கூட இந்த விசாரணை நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட்டு உரிய காலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடுகளின் பூகோள நலன்களை அனுசரித்து இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய ராஜதந்திர முடிவுகள் இன்றுள்ள நிலைமையினை தோற்றுவித்திருக்கக்கூடும். போர்க்குற்ற விசாரணையை பயன்படுத்தும் அரசியல் ராஜதந்திர நகர்வுகள் முக்கியமானவை தான், ஆனால் அதை விட முக்கியமானது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை முன்வைத்து அரசியல் ராஜதந்திரம் செய்வதுதான். தமிழ் மக்களின் கோட்பாடான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற கோரிக்கைகள் என்றைக்கு சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையில் உச்சரிக்கப்படுகின்றதோ அன்று தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான விடியலும் ஆரம்பமாகும்.