கோண்டாவில் ஆயுர் வேத வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கோண்டாவில் இலவச சித்த ஆயுர் வேத வைத்தியசாலைக்கான புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை(28.5.2015) பிற்பகல் 01 மணியளவில் இடம்பெற்றது.
கொக்குவில் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார்,செயலாளர் திருமதி ரி.அன்னலிங்கம்,ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் டாக்டர் திருமதி-சிவகௌரி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் இணைந்து புதியகட்டடத்தைச் சம்பிராதயபூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வில் வடமாகாண உள்ளுராட்சித் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் மே.சாந்தசீலன்,நல்லூர் பிரதேச சபையின் கொக்குவில் உப அலுவலகப் பொறுப்பதிகாரி இ.இராகவன்,நல்லூர் பிரதேச சபையின் அபிவிருத்தி உதவியாளர் அ.கமலேஸ்வரசர்மா,நல்லூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.ரவீந்திரதாஸ்,கோண்டாவில் ஆயுர் வேத வைத்தியசாலையின் முன்னாள் டாக்டர் கே.நடேசராசா,கொக்குவில் பொது நூலக நூலகர்களான செல்வி கி.அனிதா,த.சத்தியமூர்த்தி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி வைத்தியசாலைக்கு நிரந்தரக் கட்டடமில்லாத நிலையில் இதுவரை காலமும் தற்காலிக கொட்டகையிலேயே இயங்கிவந்தது.இந்த நிலையில் பிரதேச சபையின் முன்னாள் செயலாளராகவிருந்த ஜே.சாந்தசீலனின் முயற்சியினால் சபையின் நிதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டுச் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.நகர் நிருபர்-