செய்திகள்

கோதாபாய எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்: நாடு திரும்பிய பொலிஸ் பேச்சாளர்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கொலை அச்சுறுத்தலினால் தான், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக முன்னாள் காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் சிலகாலமாக அடைக்கலம் தேடியிருந்த காவல்துறை மூத்த கண்காணிப்பாளரான பிரசாந்த ஜெயக்கொடி இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

“நான் காவல்துறை ஊடகப் பேச்சாளராகவும், இரத்தினபுரி மூத்த காவல்துறை கண்காணிப்பாளராகவும் இருந்தேன். கடுமையான அரசியல் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டதால், நான் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது.

அழுத்தங்களுக்கு அடிபணிய நான் மறுத்த போது, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது எடுபிடிகளும் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர். ஒரு ஆண்டு ஏழு மாதங்களுக்குப் பின்னர் நான் நாடு திரும்பியுள்ளேன். நாட்டில் இப்போது நல்லதொரு நிலைமைய ஏற்பட்டுள்ளது என்று நம்புகிறேன்.

அவுஸ்ரேலியாவிலும் கூட எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆனால் அவுஸ்ரேலிய அரசாங்கம் எனக்குப் பாதுகாப்பு அளித்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.