செய்திகள்

கோதாபாய மீது இன்று விசாரணை: ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று வியாழக்கிழமை லஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு மோசடி திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற வளவுக்குள் உயர்பாதுகாப்பு வலயத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் இன்றைய தினமும் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர். ஆனால், லஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோர் மீது மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்திருந்தது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பணம், பதவி வழங்கி கட்சி மாற்றப்பட்ட குற்றச்சாட்டுக்காக மஹிந்தவிடமும், எவன்கார்ட், ரக்ன லங்கா ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்‌ஷவிடமும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஊழல் மோசடி ஆணைக்குழு இருவருக்கும் இருவேறு தினங்களில் வருமாறு அழைப்பாணை விடுத்திருந்தது.