செய்திகள்

கோர்ட்டுக்கு இழுக்கப்படும் கட்சி?

நிலாந்தன்

2014ஆம் ஆண்டு மன்னாரில்,முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சித் தலைவர்களின் சந்திப்பு அது.ஆயர் அப்பொழுது தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் அதன் அழைப்பாளராகவும் இருந்தார்.அச்சந்திப்பில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள். சந்திப்பின் முடிவில் சம்பந்தர் ஆயரைப் பார்த்து பின்வருமாறு சொன்னார்…”பிஷப் நீங்கள் சொல்லுறதச் சொல்லுங்கோ, ஆனால் கடைசியா முடிவெடுக்கிறது நாங்கள்தான்” என்று. அப்பொழுது அப்படிச் சொல்லக்கூடிய பலம் சம்பந்தருக்கு இருந்தது. ஆனால் அவர் எடுத்த முடிவுகளின் விளைவு என்ன? அப்படிச் சொன்ன சம்பந்தர் இப்பொழுது எங்கே நிற்கிறார்? அவருடைய முடிவுகளின் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மிகவும் வித்தியாசமான ஒரு கூட்டு உடைந்து போய்விட்டது.அதுமட்டுமல்ல அவருடைய சொந்த கட்சியே இப்பொழுது இரண்டாகி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல,அன்றைக்கு அப்படித் திமிராகச் சொன்ன சம்பந்தரை இன்றைக்கு அவருடைய சொந்த கட்சிக்காரர்களே மதியாத ஒரு நிலை.ஆம். “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.அவள் யாரையும் மன்னிப்பதில்லை”

இப்பொழுது தமிழரசுக் கட்சி உடையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.கடந்த வெள்ளிக்கு கிழமை கிளிநொச்சியில் நடந்த சந்திப்பின் பின் கட்சி நீதிமன்றதுக்குப் போக வேண்டிய வாய்ப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளனவா?

ஒரு குடும்பத்துக்குள் பிணக்கு வந்தால் அதை அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் தீர்த்து வைப்பதுண்டு. அல்லது அந்தக் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்ட வெளியாட்கள் அதைத் தீர்த்து வைப்பதுண்டு.அதுவும் முடியாது போனால், விவகாரம்  போலீஸ் நிலையத்துக்கோ,நீதிமன்றத்துக்கோ போகும்.தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவற்றைப் பார்த்தால் அங்கே இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூத்தவர்கள் யாரும் இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது.கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் சம்பந்தர், மாவை, குலநாயகம், கனகசபாபதி, சிவஞானம்… போன்றவர்கள் ஏதோ ஒரு பக்கம் உலாஞ்சுவதாகத் தெரிகிறது. அதனால் அவர்கள் நடுநிலையாக நின்று விவகாரத்தைக் கையாள முடியாதவர்களாகக் காணப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.சம்மந்தரும் மாவையும் கனகசபாபதியும் அதிகம் சிறீதரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள்.குலநாயகமும் சிவஞானமும் அதிகம் சுமந்திரனுக்கு நெருக்கமாகக் காணப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு பின்னணியில்,கட்சிக்குள் வெடித்திருக்கும் பிளவைத் தீர்த்து வைப்பதற்கு கட்சியின் மூத்தவர்களால் முடியவில்லை. அதன் விளைவாகத்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றது.

இப்பொழுதும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுத்தால்,விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட மூப்போடும்;முதிர்ச்சியோடும்;பக்குவத்தோடும்; மிடுக்கோடும்  கட்சிக்குள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

 

கொழும்பில் நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் வழக்கு தொடுத்த அதே காலப்பகுதியில், திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு இணக்கமானவர்கள் என்று கருதப்படுகின்றவர்களால் இரண்டு வழக்குகள் கொடுக்கப்பட்டன.தென்னிலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை சுமந்திரன் எதிர்க்கிறார். ஆனால் அவருடைய சொந்தக் கட்சியை உடைக்கும் வேலைகளை அவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு ஊடாகச் செய்கிறார் என்று அவருடைய எதிரணி அவரை குற்றம் சாட்டுகின்றது.

ஆனால் தான் அந்த வழக்குகளுடன் சம்பந்தப்படவில்லை என்று சுமந்திரன் மறுத்திருக்கிறார்.எனினும்,அவர்தான் எல்லாவற்றின் பின்னணியிலும் நிற்கிறார் என்ற அபிப்பிராயம் பரவலாகக் காணப்படுகின்றது.அவருடைய பெயர் மேலும் கெட்டுக்கொண்டே போகிறது.

பிரச்சனை ஒரு சட்ட விவகாரம் ஆக்கப்பட்டதும் சிறீதரன் தன்னுடைய முகநூலில் “தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்” என்று எழுதினார். அதன்பின் அவருக்குப் பதில் கூறுவது போல, சுமந்திரனுக்கு ஆதரவான வடமாராட்சியைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அதே வசனத்தை தனது முகநூலில் எழுதினார். இதில் யார் தர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? யார் அதர்மத்தின் பக்கம் நிற்கின்றார்கள்? எது தர்மம்?

கட்சி பல ஆண்டுகளாக யாப்பை மீறி வழி நடத்தப்பட்டிருக்கிறது என்று சிவகரன் கூறுகிறார்.அவர் தமிழரசு கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தவர்.பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்.பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சிவில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகிய போது அவர் சுமந்திரனின் பக்கம் நிற்கிறார் என்ற குற்றச்சாட்டு எதிரணியால் முன்வைக்கப்படுகின்றது.கட்சியின் யாப்பு நடந்து முடிந்த தேர்தலில் மட்டும் மீறப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே அது மீறப்பட்டு விட்டது.அதற்குக் கட்சியின் முக்கியஸ்தர்களாகக் காணப்பட்ட எல்லாச் சட்டத்தரணிகளும் பொறுப்பு.சிவகரனின் வார்த்தைகளில் சொன்னால்,கட்சிக்குள் “வழிப்போக்கர்கள்” தலையெடுத்ததே யாப்புக்கு முரணாகத்தான்.

சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் யாப்பானது தமக்கு நீதியைத் தரவில்லை என்று கூறிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் உள்ள மூத்த பெரிய கட்சியானது தனது சொந்த யாப்பையே மீறிச் செலுத்தப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் சட்டத்தரணிகள் பலர் உண்டு. சட்டத்தரணிகளின் அரசியல் அல்லது அப்புக்காத்துக்களின் அரசியல் ஒரு மூத்த பெரிய கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

கட்சிக்குள்ளேயே விவகாரத்தைத் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கட்சி தோற்றுப் போய்விட்டதைக்  காட்டுகின்றது.கட்சிக்குள் மூத்தவர்களாகக் காணப்படும் யாரும் அதைத் தீர்த்து வைக்கும் தகமையோடும் முதிர்ச்சியோடும் இல்லை என்பதையும் அது காட்டுகின்றது.கட்சிக்குள் மட்டுமல்ல கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்குப் பொதுவான யாரும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

முன்பு கட்சிகளுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முனைந்த சிவில் சமூகங்கள் இப்பொழுது கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு விடயத்தில் தலையிடுவதாகத் தெரியவில்லை. வழமையாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் சிவகரன் இப்பொழுது சுமந்திரனுக்குச் சார்பானவராகப் பார்க்கப்படுகிறார்.ஆங்கிலம் பேசும் உலக சமூகத்துடன் அதிகம் இடையூடாடும் தமிழ் சிவில் சமூக அமையம்-இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் அமைப்பு-அதுவும் தலையிடும் நிலமைகளைக் காணவில்லை.அந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான குருபரன் தமிழரசுக் கட்சிக்கு எதிரான ஒரு  வழக்கில் தோன்றுகிறார்.இவ்வாறு சிவில் சமூகங்கள் இரு தரப்பையும் ஒரு மேசைக்கு அழைத்துக் கொண்டுவரும் சக்தியற்றிருக்கும் ஒரு சூழலில்,மதத் தலைவர்களும் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.பொதுவாக சிவில் சமூகங்கள் முன்கை எடுக்கும் போதுதான் மதத் தலைவர்களும் அவற்றோடு இணைந்து செயல்படுவதுண்டு. இம்முறை சிவில் சமூகங்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் விடயத்தில் சிவில் சமூகங்கள் தலையீடு செய்திருக்கின்றன.ஆனால் ஒரு கட்சிக்குள் பிணக்குகள் ஏற்படும்போது அதைத் தீர்ப்பதற்கு சிவில் சமூகங்கள் தலையிட்டது குறைவு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் அணி உடைந்து வெளியே வந்த பொழுது, சில தனிநபர்கள்தான் தலையிட்டார்கள்.எனினும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள்ளும் உடைவு வந்திருக்கிறது.அதைத் தீர்ப்பதற்குச் சிவில் சமூகங்கள் தலையிடாத ஒரு நிலை காணப்படுகிறது.

அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூத்த கட்சிகளில் ஒன்றாகவும் உள்ளவற்றில் பெரியதாகவும் காணப்படும் ஒரு கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத் தீர்த்துவைக்க கட்சிக்குள் மூப்பாக உள்ளவர்களாலும் முடியவில்லை;கட்சிக்கு வெளியேயும் யாரும் இல்லையா?இது தமிழரசுக் கட்சியின் சீரழிவை மட்டும் காட்டவில்லை. தமிழ் அரசியலின் சீரழிவையும் காட்டுகின்றது. ஒரு பொதுவான,பலமான மக்கள் இயக்கம்;ஒரு தேசிய இயக்கம் இல்லாத பாரதூரமான வெற்றிடத்தை அது காட்டுகின்றது.

அரங்கில் உள்ள புத்திஜீவிகள்,கருத்துருவாக்கிகள்,குடிமக்கள் சமூகங்கள், மதத்தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் போன்ற யாருமே இந்த விடயத்தில் தலையிடாத ஒரு நிலை.பெரும்பாலானவர்கள் இது தங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விடயம் என்று கருதிக்கொண்டு பார்வையாளர்களாகக் காணப்படுகிறார்கள். சிலர் அரசியற் கூர்ப்பின் வழியில்,சிதைய வேண்டியது சிதையட்டும் என்று கூறுகிறார்கள்.இது தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாகப் பலமாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. இது தமிழரசுக் கட்சிக்கு வந்த சோதனை மட்டுமல்ல, தமிழ் அரசியல் சமூகம் முழுவதற்கும் வந்த ஒரு சோதனை.

அவ்வாறு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கு நீதியான,மூப்பான ஆட்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால்,கட்சியின் எதிர்காலத்தை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். நீதிமன்றத்தில் இப்பொழுது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கான  தீர்ப்புக்களின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படும்.

தமக்கு எதிராக இழைக்கப்பட்ட  இனப்படுகொலை,போர்க் குற்றம்,மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் காணப்படும், உள்ளதில் பெரிய ஒரு கட்சி தனக்குள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.எந்த உள்நாட்டு நீதியை ஏற்றுக்கொள்ள மறுத்து பன்னாட்டு நீதியைக் கேட்கின்றதோ,அதே உள்நாட்டு நீதியின் முன் போய் நிற்கின்றது.இது,தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகின்றதா?அல்லது அப்புக்காத்துமாரின் அரசியல் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றதா?