செய்திகள்

கோலி தகாத வார்த்தைகளால் ஏசியதாக பத்திரிகையாளர் முறைப்பாடு

இந்திய நட்சத்திர துடு;ப்பாட்ட வீரர் விராட்கோலி தன்னை தகாத வார்த்தைகளால் ஏசியதாக இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்சின் பத்திரிகையாளர் சர்வதே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பேர்த்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை, காரணம் ஏதுமின்றி அவர் தகாதவார்த்தைகளால் திட்டியதாக குறிப்பிட்ட பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.  இந்திய அணியின்அதிகாரிகள் அவ்வாறான சம்பவம் நடைபெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை தவறுதலாக அந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், கோலி தகாத வார்த்தைகள் எதனையும் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை தான் பார்த்துக்கொண்டிருந்த வேளை விராட்கோலி சீற்றமடைந்தவராக காணப்பட்டார் என்னைநோக்கி சைகை செய்த வண்ணமிருந்தார் என ஜஸ்விந்தர் சிந்து என்ற அந்த ஊடகவியலாளர் ஹிந்துஸ்தான் டைம்சில் எழுதியுள்ளார். பின்னர் கோலி உள்ளே செல்லும்போது என்னை முறைத்தவாறு சென்றார், ஹிந்தியில் தகாத வார்த்தைகளால் ஏதோ தெரிவித்தார் எனவும் அவர் எழுதியுள்ளார்.

இதற்கு பத்து நிமிடங்களுக்கு பின்னர் வெளியே வந்த கோலி தன்னை பார்த்து சிரித்தபடி கையசைத்தாகவும் தான் அதிர்ந்துபோனதாகவும் அவர் மேலும் எழுதியுள்ளார்.அதன் பின்னர் மற்றுமொரு பத்திரிகையாளர் ஊடாக அவர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளதாகவும் அவர் எழுதியுள்ளார்.  இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பத்திரிகையாளர் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவரிற்கு இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் கோலி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார் என்பதை நிராகரித்துள்ள இந்திய அணியின் ஊடக முகாமையாளர் விராட் அந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த நபருடன் உரையாடியுள்ளார். இந்த சம்பவம் இத்துடன் முடிவடைந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.  இதேவேளை விராட் இந்தவிடயம் குறித்து தெளிவுபடுத்திவிட்டார்,தற்போதைய உலககிண்ணப்போட்டிகளே முக்கியமானவை,இந்த விடயங்களை மறந்துவிடவேணடும். தான் சூழலை தவறாக புரிந்துகொண்டதாக விராட் தெரிவித்துள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.