செய்திகள்

கோவாவில் கட்டப்படும் கப்பல்களை பார்வையிட்டது பாதுகாப்பு உயர்மட்டக் குழு

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை  கடற்படைக்காக கட்டப்பட்டு வரும் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

கடற்படைக்காக இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை கோவாவில் உள்ள, கோவா சிப்பிங்யார்ட் நிறுவனம் கட்டி வருகிறது. கோவா தலைநகர் பனர்ஜியில் இருந்து 40.கி.மீ தொலைவில் இந்த கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது.

இங்கு கட்டப்படும் கப்பல்களைக் கட்டும் பணிகளைப் பார்வையிடுவதற்காக   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர்   கோவா கப்பல் கட்டும் தளத்துக்குச் சென்றிருந்தனர்.

இந்தக் குழுவில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் கடற்படை உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

இதன் போது, கோவா சிப்பிங்யார்ட் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் சேகர் மிட்டவலுடன், இலங்கை   குழுவினர் பேச்சுக்களையும் நடத்தினர்.

கோவாவில் கட்டப்பட்டு வரும் இரண்டு ஆழ்கடல் ரோந்துப் படகுகளில் ஒன்று வரும், 2017 ஓகஸ்ட் மாதமும், இரண்டாவது படகு அதற்கடுத்த ஆண்டும் இலங்கை  கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, கோவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கவே சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் நேற்று பனர்ஜி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

n10

goa-shiping-yard-2