செய்திகள்

கோவையில் 3 ஆயிரம் பாம்புகளை பிடித்த என்ஜினீயரிங் மாணவிகள்

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்’ என்பார்கள். ஆனால் பாம்புகள் 2 மாணவிகளைக் கண்டால் அஞ்சி நடுங்குகின்றன. அந்த மாணவிகள் யார் என்று கேட்கிறீர்களா? அவர்கள் தான் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஷோபனா, தரங்கினி.

பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் படித்து வருகிறார்கள்.

இந்த மாணவிகள் இருவரும் கணேசன், சந்தோஷ், ஜார்ஜ், ரமேஷ், மனோஜ் ஆகியோருடன் சேர்ந்து ‘வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.

‘பாம்பு உள்பட எந்த உயிர்களையும் பொதுமக்கள் கொல்ல வேண்டாம். பாம்பு இருப்பது பற்றி அறிந்தால் எங்களுக்கு தகவல் கொடுங்கள். நாங்கள் அதை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டு விடுகிறோம்’ என்று இந்த அமைப்பினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்கள் செல்போன் நம்பரையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்டால் கூட அவற்றை அடிக்காமல் மாணவிகளுக்கும் அவர்களது குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கின்றனர்.

சிறிது நேரத்தில் மாணவிகள் மற்றும் குழுவில் உள்ளவர்கள் அங்கு ஆஜராகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாம்புகளை லாகவமாகப் பிடிக்கின்றனர். பின்னர் அவற்றை வனப்பகுதியில் கொண்டு விடுகின்றனர்.

இதுவரை இவர்கள் கோவை சாய்பாபா காலனி, வடவள்ளி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் மற்றும் கோவையின் பிற பகுதிகளில் 3 ஆயிரம் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர்.

கரப்பான் பூச்சியை கண்டாலே ஓடும் பெண்கள் மத்தியில் பாம்புகளை லாவகமாக பிடிக்கும் இந்த என்ஜினீயரிங் மாணவிகள் வீர மங்கைகளாகத் திகழ்கிறார்கள்.

ஷோபனா டி.வி.எஸ். நகரில் உள்ள சரவணா நகரிலும், தரங்கினி ஆர்.எஸ்.புரத்திலும் குழுவில் உள்ளவர்கள் கோவையின் மற்ற பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.