செய்திகள்

சங்ககாரவை ஓய்வுபெற வேண்டாம் என்று முழந்தாளில் மண்டியிட்டு கேட்டுக்கொள்ளும் அணித்தலைவர் மத்தியூஸ்

இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்ககாரவை நடைபெற்றுவரும் உலகக்கோப்பைக்கு பின்னர் ஓய்வு பெறவேண்டாம் அவரது முழந்தாளில் மண்டியிட்டு கேட்டுக்கொள்வதாக இலங்கை அணியின் அணித்தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் உருக்கமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஓய்வுபெற வேண்டாம் என்று அவரது முழந்தாளில் மண்டியிட்டு கேட்டுக்கொள்வதாகவும் , ஆனாலும் இது அவரது விருப்பம் என்றும் அதனை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ள மத்தியூஸ், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய எல்லா சந்தர்ப்பங்களுக்காகவும் தாங்கள் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும் இதனை மறுத்துள்ள 37 வயதுடைய சங்ககார , ஒருவர் விளையாடுவது என்பது அவர் போர்மில் இருக்கிறாரா இல்லையா என்பதில் இல்லை என்றும் காலமும் நேரமும் மற்றும் இது சரியானதா என்ற ஒருவரது உணர்வுமே ஓய்வை தீர்மானிக்கிறது என்று கூறினார்.

இன்று ஸ்கொட்லாந்துக்கெதிரான ஆட்டத்தில் 124 ஓட்டங்களை பெற்றதன் மூலம் உலக கிண்ண போட்டி ஒன்றில் தொடர்ச்சியாக 4 சதங்களை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை சங்ககார நிலைநாட்டியுளார். முன்னதாக பங்களாதேசுக்கெதிராக 105 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கெதிராக 117 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியாவுக்கெதிராக 104 ஓட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

நடைபெறும் இந்த உலகக் கிண்ண போட்டியில் இதுவரை 496 ஓட்டங்களை பெற்று முன்னினையில் அவர் இருக்கிறார்.