சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம்: பிரதான சந்தேகநபரான இந்தியர் தப்பியோட்டம்
இந்திய- இலங்கை சட்டவிரோத சிறுநீரக வியாபார விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் எட்டுப் பேரில் பிரதான சந்தேக நபர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளார். மிரிஹான விஷேட தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த லக் ஷ்மன் குமார் எனும் சந்தேகநபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார், நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதவான் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர்.
அண்மையில் வெள்ளவத்தை மற்றும் ஹெவலொக் பகுதிகளில் வைத்து 8 இந்தியர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணை செய்யப்ப்ட்டு வருகின்றன. இந் நிலையிலேயே நேற்றும் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன் போது போது கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களில் 7 பேர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். மன்றுக்கு மேலதிக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபர் ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு வெளியேறா வண்னம் தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் நீதிவானைக் கோரினர்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் நிஸாந்த பீரிஸ், சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்ததுடன் அவரை கைது செய்ய திறந்த பிடிவிறாந்தினையும் பிறப்பித்தார். அத்துடன் சந்தேக நபர்கள் 8 பேரிடமிருந்தும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்ப்ட்டுள்ள இறப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்து சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் மேலதிக அறிக்கை ஊடாக மன்றுக்கு சுட்டிக்காட்டினர்.
அத்துடன் இந்த விசாரணைகளின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதாக கூறப்படும் இலங்கையின் தனியார் வைத்தியசாலைகளில் உள்ள அது குறித்த பதிவுகள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் தம்மிடம் ஒப்படைக்க சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலைகள் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளருக்கு உத்தரவிடுமாறு பொலிஸார் கோரினர்.
அதனையும் ஏற்றுக்கொண்ட நீதிவான் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பிலான பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளருக்கு குறித்த ஆவணங்களை விசாரணையாளருக்கு கையளிக்குமாறு உத்தரவு பிரப்பித்தார். இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக வழக்கை எதிர்வரும் மே 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிவான் அது வரை சந்தேக நபர்களை தொடர்ந்தும் மிரிஹான தடுப்பு முகாமில் வைக்க உத்தரவிட்டார்.
R-06