செய்திகள்

சட்டவிரோத மணற்கொள்ளையால் வாழ்விடம் பறிபோகின்றது: ஐங்கரநேசனிடம் முறைப்பாடு (படங்கள்)

பூநகரி – கௌதாரிமுனையில் கட்டுப்பாடில்லாமல் தொடரும் மணற்கொள்ளையால் தங்கள் வாழ்விடம் பறிபோவதாகவும் மணல் அகழ்வை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும் கௌதாரிமுனை மக்கள் வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ. ஐங்கரநேசனிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

கௌதாரிமுனையில் இருந்து சட்டவிரோதமாகத் தினமும் நூற்றுக்கணக்கான பாரவூர்திகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்குத் தொலைபேசியில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் நேற்று புதன்கிழமை அப்பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது மணற் கொள்ளையால் தமது வாழ்விடம் பறிபோவதாகவும் மணல் அகழ்வை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படியும் அப்பகுதி மக்கள் அமைச்சர் பொ. ஐங்கரநேசனிடம் முறையிட்டுள்ளார்கள்.

பெரும் பெரும் குன்றுகளாக – கௌதாரிமுனைக்கு அழகு சேர்த்த மணற்குன்றுகள் மணல் அகழ்வால் காணாமல் போய்க்கொண்டிருப்பதாவும், நூற்றுக்கணக்கான பாரவூர்திகள் தினமும் அங்குவந்து போய்க் கொண்டிருப்பதால் வீதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுப் போக்குவரத்துக்குத் தாங்கள் சிரமப்படுவதாகவும கூறிய மக்கள், மணல் அகழப்பட்ட பகுதிகளுக்கு ஊடாகக் கடல் நீர் கிராமங்களில் உட்புகும் அபாயம் நிலவுவதாகவும் குடிநீரின் சுவையிலும் மணத்திலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

பொதுமக்களுடன் மணல் அகழும் பகுதிகளுக்குச் சென்றிருந்த அமைச்சர், மணல் ஏற்றிச்கொண்டிருந்த பாரவூர்திகளின் அனுமதிப் பத்திரங்களை சோதனையிட்டார் அப்போது மணல் அகழ்வதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் வேறு இடங்களில் மணல் ஏற்றிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. அவ்வாறு முறையற்ற விதத்தில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்திகளின் ஓட்டுநர்களை எச்சரித்த அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஏற்றிய மணல் முழுவதையும் அகழப்பட்ட இடங்களில் மீளவும் கொட்டுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மக்களுடன் உரையாடியபோது, சுற்றாடல் அதிகாரசபையின் ஒப்புதலோ, பிரதேச செயலரின் ஒப்புதலோ இல்லாமல் மத்திய புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. முறைகேடான இந்த அனுமதியைப் பயன்படுத்தி முறைகேடாக மணல் அகழப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதைத் தொடர்வதற்கு அனுமதித்தால் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கௌதாரிமுனையில் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்படும். இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு நாம் உடனடியாகக் கொண்டுசெல்வோம். அரசு செவிமடுக்காது போனால், மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடவேண்டும். போராடாமல் எங்கள் எந்த உரிமையையும் பெற முடியாது என்று தெரிவித்தார்.

3 (5) 4 (3) 5 (2) 6 (2) 7 (2) 8 (2)2 (5)

1 (4)