செய்திகள்

சட்டவிரோத மணல் கடத்தல் முறியடிப்பு: 14 பேர் கைது

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட பதினான்கு பேர் மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பொலிஸாரால் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பதின்மூன்று உழவு இயந்திரங்கள், அகழப்பட்ட மண் மற்றும் மண் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பதினான்கு பேரும் பெக்கோ இயந்திரங்களின் சாரதிகள் என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புத்தம்புரிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலொன்றிற்கு அமைய சட்டவிரோத மணல் கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்தினவின் பணிப்புக்கமைவாக இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஆயித்தியமலை மற்றும் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், உழவு இயந்திரம் மற்றும் பெக்கோ இயந்திரத்தின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளிடம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

N5