செய்திகள்

சமலை பிரதமர் வேட்பாளராக்க கோதாபய ஆதரவு வழங்குவார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் சமல் ராஜபக்ஷவைப் பெயரிடுவதென்றால் அதற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான இணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அத்துரலிய ரத்தினதேரர் மற்றும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பின் பிரதானியான அஷோக் அபேகுணவர்தன ஆகியோர் சமீபத்தில் கோதாபய ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கோதாபய ராஜபக்ஷவுக்கு நெருங்கிய ஒருவரான திலந்த ஜயவீரவும் கலந்துகொண்டுள்ளார். இலங்கை அரசியல்வாதிகளின் நடத்தை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாகவும்  எனவே செயற்பாட்டு அரசியலுக்கு வருவதற்கு எண்ணம் இல்லை எனவும் கோதாபய ராஜபக்ஷ இச்சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரிடம் வினவியுள்ளது. இச்சந்திப்பு குறித்து  தகவல்கள் வெளியாகியபோதிலும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களில் எவரையும் பிரதமர் வேட்பாளராகப் பெயரிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.