செய்திகள்

சமஷ்டியே வழி, சம உரிமைகள் என்பது வெறும் கண்துடைப்பு: முதலமைச்சரின் கருத்து மடல்

பொது விடயங்கள், பிற அரசியல்வாதிகளின் கருத்துக்கள், பத்திரிகை விமர்சனங்கள் போன்றவற்றைப் பற்றி முதலமைச்சருக்கு இருக்கும் கருத்துக்கள் எவை என்று அறிவதில் எம் மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது எனக்கு வரும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலமாகவும் நண்பர்கள், நலன்விரும்பிகள் கேட்கும் கேள்விகள் மூலமாகவும் அறியவந்துள்ளது. இது சம்பந்தமாக கருத்து மடல் ஒன்றை எம்மக்களுக்கு முதலமைச்சர் எழுதினால் என்ன என்று கேட்கப்பட்டபோது பூரண சம்மதமும் ஒப்புதலும் என்னால் கொடுக்கப்பட்டது. எனினும் நேரம் கிடைக்கவில்லை என்று திண்டாடிக்கொண்டு இருந்த போது இந்நாள் (18.04.2016) வந்தது.

இன்று மாலை கொழும்பில் எம்மக்களின் காணி விடயங்கள் பற்றி மாண்புமிகு ஜனாதிபதியுடனும் கௌரவ பிரதம மந்திரியுடனும் பேச இருந்த நான் தற்பொழுது யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றேன். எப்பொழுதுமே நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. கட்டிலில் படுத்திருந்த என்னை உங்களுக்கான கருத்துமடல் என்ற எண்ணம் உசுப்பேற்றிவிட்டது. தொடர்ந்து படுக்க முடியாத நிலை. சற்று நேரத்திற்கு முன்தான் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்களின் கருத்தொன்றை வலம்புரியில் வாசித்தேன். ‘தமிழ் அரசியல் கட்சிகளே சமஷ்டியைக் கோருகின்றனர். – தமிழ் மக்கள் அதைக் கோரவில்லை – ஜே.வி.பி’ என்று முன்பக்கத்தில் தலையங்கம் இருந்தது. மேற்படி கருத்தை முன்வைத்து முதல் மடலை முடித்தால் என்ன என்றது மனம்.

உடனே எழுதத் தொடங்கிவிட்டேன்.

உண்மையில் தமிழ் மக்கள் சமஷ்டியைக் கோரவில்லையா? அன்று தொடக்கம் இன்று வரையில் பெரும்பான்மைக் கட்சியாக வடக்கிலும் கிழக்கிலும் நிலைபெற்றிருக்கும் ஒரே தமிழ்க் கட்சி என்றால் அது தமிழரசுக் கட்சி. அதைத்தான் ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி என்று கூறிவந்தனர் தென்னவர். சமஷ்டிக் கட்சியின் முக்கியமான கருத்து நாட்டில் சமஷ்டி ஆட்சி நடக்க வேண்டும் என்பதே. தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு என்று ஒரு அதிகார அலகு இருக்க வேண்டும் என்பதே. சிங்களவருக்கு எவ்வாறு சிங்கள மொழியும், சிங்கள வசிப்பிடங்களும் முக்கியமோ அவ்வாறே தமிழ் மக்களுக்கும் அவர்கள் மொழியும் சரித்திரபூர்வமான வாழ்விடங்களும் முக்கியமானவை என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

திரு.டில்வின் சில்வா அவர்கள் இவற்றை அறியாதவர் அல்ல. அண்மைக் காலங்களில் எமது அடிப்படைகளை நாம் ஆணித்தரமாக எடுத்து விளம்பத் தொடங்கியதும் கட்சிகள், பொது அமைப்புக்கள் எதைக் கூறினாலும் தமிழ் மக்கள் ஒருவேளை அவர்கள் கருத்துக்களை ஆதரிக்க மாட்டார்கள் என்ற நப்பாசை டில்வினைப் பற்றிக்கொண்டுள்ளது போலும். தமிழ் மக்கள் எதைக் கொடுத்தாலும் திருப்திப்படுவார்கள் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்களை வெருட்டி வழிக்குக் கொண்டுவரலாம் என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

சமஷ்டி முறை என்பது வெறும் அரசியல் அல்லது சட்டரீதியான தீர்வு மட்டுமல்ல. அது யதார்த்தமுமாகும். போரின் போது சேர்ந்தோ சேராமலோ பங்கேற்ற புதிய அரசியல் கட்சிகள் கூட சமஷ்டி முறைத் தீர்வையே தேர்ந்தெடுத்துள்ளன. மக்களுக்கு சமஷ்டி மீது விருப்பில்லை என்று கூறும் திரு.டில்வின் அவர்கள் தமிழ் மக்கள் இதுகாறும் சமஷ்டி முறையையே தேர்தல்களில் ஆதரித்து வந்தார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் சமஷ்டி என்ற சொல்லுக்கு அவர் காட்டும் அச்சம் வியப்பைத் தருகின்றது. ஏதோ தீண்டத்தகாததைத் தமிழ் அரசியல்க் கட்சிகள் தீண்டியுள்ளதாகவும் அதிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு தன்னைச் சார்ந்துள்ளதாவும் நினைத்து அவர் பேசுவது விந்தையாகத் இருக்கின்றது. ஏதோவிதமான சமஷ்டி வழிமுறை ஒன்று தான் சிங்கள மக்களுடன் தமிழ்ப் பேசும் மக்கள் சுய மரியாதையுடன் சேர்ந்து வாழக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ஊர்ஜிதம் செய்யும். தமிழ்ப் பேசும் மக்கள் சமஷ்டி வழிமுறையை நிராகரித்துள்ளார்கள் என்றால் தமது சுய மரியாதையை விலை பேச ஆயத்தமாக உள்ளார்கள் என்று அர்த்தம்.

சமஷ்டி முறை ஏகாதிபத்தியத்தை மகிழ்ச்சிப்படுத்தவல்லது என்று கூறும் திரு. டில்வின் சில்வா அவர்கள் தமது கட்சி சார்பில் எமது மக்களுக்குத் தரவிழைவதைப் பார்த்தோமானல் ஒற்றையாட்சியின் கீழ் சகல மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள். இதனால் இனங்கள் அண்மைப்படுத்தப்படுவன என்றுள்ளார். தேசிய ஒற்றுமை வலியுறுத்தப்படும் என்கின்றார். பொதுப் பிரச்சினைகளுக்கு சகல இனங்களும் சேர்ந்து முகம் கொடுப்பன என்கின்றார்.

திரு. டில்வின் சில்வா அவர்கள் சரித்திரத்தை மறந்து பேசுகின்றார். ஒரு காலத்தில் சமஷ்டி வேண்டாம் என்று கூறியவர்கள் தமிழ் மக்கள். 1926ல் திரு.எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் ஒக்ஸ்பொர்ட் சர்வதேச கலாசாலையில் படித்து விட்டு வந்து இங்கு பேசிய போது ஏதோ வகையிலான சமஸ்டி முறையே எமக்குச் சிறந்தது என்றார். அப்போது தமிழர்கள் ‘இல்லை அது தேவையில்லை. சம உரிமைகள் தற்போது எமக்கு ஆங்கிலேயரின் கீழ் கிடைக்கின்றன. நாட்டின் எல்லாப் பாகங்களிலும் எம்மால் வசிக்கவும், தொழில் புரியவும், காணிகளை வாங்கி விற்கவும் முடிகின்றது. ஆனால் சமஷ்டி எம்மைத் தனிமைப்படுத்தி விடும்’ என்றார்கள். சமஷ்டியை மறுத்தார்கள். உண்மையில் தமிழ்ப் பேசும் மக்களைத் தனிமைப்படுத்தி வட கிழக்கிற்குள் அடைத்து வைக்கும் எண்ணத்துடன் தான் திரு.பண்டாரநாயக்கா அவர்கள் அன்று சமஷ்டியை வலியுறுத்த விழைந்தார் என்பதே எனது கணிப்பு. அது எம்மால் ஏற்கப்படாததால்த்தான் அவர் பதவிக்கு வந்ததும் சமஷ்டி கோரிய எம்முடன் சேர்ந்து சமஷ்டிக்கு வழி வகுக்காமல் அவர் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தைக் கொண்டு வந்தார். அத்துடன் வன் கலவரங்களை ஊக்குவித்து இலங்கையில் பரவலாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களை அவர்கள் வாழ்ந்து வந்த தெற்குப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற் கொண்டார்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததும் திரு.டில்வின் சில்வா அவர்களின் கருத்தை சிங்கள மக்கள் முன் வைத்திருந்தார்களானால் அதனைத் தமிழ் மக்கள் ஏற்றிருப்பார்கள். சகல மக்களுக்கும் சம உரிமை என்ற கருத்து எமக்கெல்லாம் ஏற்புடைத்தாக இருந்திருக்கும். நாட்டின் தெற்குப் புறங்களில் இருந்து, கொழும்பில் இருந்து தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, வடகிழக்கு மாகாணங்களில் தஞ்சம் புகுந்த பின்னர் சகலருக்கும் சம உரிமைகள் வழங்குகின்றோம் என்பது மேலும் எம்மை பெரும்பான்மைச் சமூகத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விழையும் ஒரு வழிமுறையாகவே தெரிகின்றது. ஏன் என்றால் நாடுபூராகவும் பல இடங்களில் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கை முறையும், வாழ்வாதாரங்களும், கல்வியும், மொழி உரித்துக்களும் பறிபோய்விட்டன. அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர் தொடுத்து போரினால் சகலதையும் பறிகொடுத்து நிற்கின்றனர். நடைமுறையில் இராணுவ ஆட்சியின் கீழ் அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை இனமானது சகல உரிமைகளையுந் தன் வசம் ஐக்கியப்படுத்தியுள்ளது. ஒற்றையாட்சி முறை நடைபெறுகின்றது. அதன் கீழ் தமிழ் மக்களின் காணிகள் பறிபோகின்றன. அவர்களின் பாரம்பரிய இடங்களில் வெளியார் வந்து வாழ அரசாங்கம் வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ் நிலையில் திரு.டில்வின் சில்வா அவர்கள் கூறும் சம உரிமைகள் என்பது தனியுரிமைகளாக இருக்க முடியுமே தவிர குழும உரிமைகளாக முடியாது. அதாவது பெரும்பான்மையினத்தவர்கள் எமக்கிடும் பிச்சையாகவே இச் ‘சம உரிமைகளை’ நாம் கருத வேண்டியிருக்கும். எமது பாரம்பரிய இடங்களை ‘சம உரிமைகள்’ எமக்கெடுத்துத்தரா. எமது தனித்துவத்தைப பேண சம உரிமைகள் இடங்கொடா. எமதிடங்களில் நாம் நினைத்தவாறு நிர்வாகம் இயற்ற ‘ சம உரிமைகள்’ சந்தர்ப்பம் தரா.

பெரும்பான்மையினர் வசம் அதிகாரம் ஏற்கனவே இருந்து வரும் போது சம உரிமைகள் அவர்களால் வேண்டா வெறுப்புடன் வழங்கப்படுவனவே ஒளிய சட்டப்படி எமக்கென உரித்துடைய உரிமைகள் என்று அவை ஆகிவிடா. காலக்கிரமத்தில் எமது தனித்துவம் தொலைந்து விடும். இன அழிப்புக்கு அத்திவாரம் இடும் வழிமுறையே ‘சம உரிமைகள்’ வழங்கும் இந்த மக்கள் விடுதலை முன்னணியினரின் அரசியல்க் கொள்கை. அதிகாரங்கள் ஒரு இனத்தினரிடம் இருந்து இதுவரை காலமும் பறித்தெடுத்துப் பற்றி வைத்திருக்கப்படுவதால் அவர்கள் ஏற்பாடு செய்யும் சம உரிமைகள் நிகழ்ச்சி எம்மைத் தம் வசப் படுத்தவே உதவும். எமது பாரம்பரியங்களை, எமது மொழியை, எமது மதங்களை, எமது சரித்திர பூர்வ வாழ்விடங்களை, எமது கலாசார சூழலை நாம் பாதுகாத்துப் பேணி வர வேண்டுமானால் எமது சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டு நாமும் இந் நாட்டு மக்களே என்ற எண்ணத்தை வலியுறுத்த ஆவன செய்ய வேண்டும். அதற்கு சமஷ்டி வழிமுறையே சிறந்தது. சம உரிமைகள் என்பது வெறும் கண்துடைப்பு.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்