செய்திகள்

சமஸ்டி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்

சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிராக, நீதிமன்றம் செல்லப் போவதாக   அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அக் கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறீவர்ணசிங்க  கருத்து வெளியிடுகையில்,

“சமஸ்டி அரசுக்காக ஆதரவு தேடுவது அரசியலமைப்பு மீறல்.

வடக்கு மாகாணசபையினால் முன்மொழியப்பட்டுள்ள, தமிழ்ப்பேசும் மக்களுக்கான வடக்கு- கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறை பற்றிய யோசனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, அரசியலமைப்பு பேரவையில், ஜாதிக ஹெல உறுமய தனது எதிர்ப்பை வெளியிடும்.

சமஸ்டி யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தகைய யோசனையை கருத்தில் கொள்வதற்கு,   அரசாங்கத்துக்கு அதிகாரமில்லை.

நாட்டைப் பிரிக்கும் சமஸ்டி யோசனையை நிராகரியுங்கள் என்ற தொனிப்பொருளில், ஜாதிக ஹெல உறுமய பரப்புரையை ஆரம்பிக்கவுள்ளது.

வடமாகாணசபையின் யோசனைக்கு எதிராக வரும் நாட்களில் பேரணிகள் நடத்தப்படும். நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளும் நடத்தப்படும்.

தமிழ், சிங்கள இனங்களுக்கிடையில் இது தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் பாதிக்கும்.

இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு, இறைமை, ஒற்றையாட்சி, என்பனவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் சமஸ்டியை எதிர்க்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டிக் கோரிக்கையைக் கைவிட்டால், அதனைவிட தமிழ்மக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய நன்மை வேறேதும் இருக்க முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.