செய்திகள்

சமாதான பாதையென்பது மலர்களினால் தூவப்பட்ட பாதையல்ல: துரைராஜசிங்கம்

சமாதான பாதையென்பது மலர்களினால் தூவப்பட்ட பாதையல்ல.கல்லும்முள்ளும் நிறைந்த பாதை. சமாதான பாதையில் செல்வது என்பதே மிகமிக கடினமானவிடயம்.அந்த கடினமான பாதையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும் சென்றுகொண்டுள்ளது.வருகின்ற சலசலப்புகளையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என கிழக்கு மாகாண விவசாய,மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மட்டக்களப்பில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பி.திபாகரசர்மா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கூட்டுறவுத்துறை என்பது ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட சங்கமாகும். இது மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டதாகும்.இவை கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அழிவடைந்துசெல்கின்றது.
இவற்றினை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும். இங்கு பல வழங்கல் உள்ளபோதிலும் அவற்றினை சிறந்தமுறையில் முன்கொண்டுசெல்லாதது கவலைக்குரிய விடயமாகும்.

இதனைகட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மூவர் கொண்ட நிபுணர்கள் குழு ஆய்வுக்காக நியமிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடந்த காலத்தில் சம்பளம் பெற்றுக்கொள்ளப்படாத ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள அனைத்து மாத சம்பளங்களையும் இணைத்துவழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதேபோன்று கூட்டுறவு துறையின் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் இந்த வளர்ச்சிக்கு சேவையாற்றும்போதே சங்கம் மேலோங்கமுடியும். கடந்த ஆட்சிக்காலத்தில் ஆதிகாரங்கள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே அது சுக்குநூறாகப்போனது.அதிகாரம் என்பது ஒரு மனிதனை பிழையாக கொண்டுசெல்லக்கூடியது.அந்த அதிகாரம் ஒருவனை இருந்த இடத்தில் இருந்து தூக்கியெறிந்துவிடும்.அதிகாரம் என்பது எந்த இடத்திலும் யாராலும் பாவிக்கப்படக்கூடாத ஒன்று.

மனங்கள் சந்திக்கவேண்டும்.மனங்களின் சந்திப்பு என்ற இலக்கினை நோக்கியே தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுகொண்டுள்ளது.இன்று ஒரு கடினமான காலகட்டம்.போராட்டங்களை நடாத்தும் தலைவர்களுக்கு பெரியளவில் கஸ்டம் இல்லை.ஆனால் சமாதானத்தினை முன்னெடுக்கும் தலைவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும்.சமாதானத்தினை நோக்கிச்செல்பவர்கள் மற்றவர்களின் மனங்களையும் வெல்லவேண்டியவர்களாக உள்ளனர்.

மகாத்மாகாந்தி 12 முறை பிரித்தானியாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்.ஆனால் இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 18தடவைகள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.இந்தியா ஒன்றாக இருக்கவேண்டும் என்று கனவுகண்டார்.அவரை பல்வேறு ரூபங்களில் விமர்சித்தனர்.பல கண்டங்களை அவர் எதிர்கொண்டார்.
சமாதானத்தினை நோக்கிச்செல்பவர்களுக்கே கஸ்டங்கள் வரும்.அந்த சமாதானத்தினை நோக்கிச்செல்பவன் கஸ்டங்களை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

சம்பந்தன் ஐயா தேசிய தினத்தில் கலந்துகொண்டது தொடர்பில் பல்வேறு வெடிப்புகள் எழுந்தன.பல பூகம்பங்கள் எழுந்தன.சுதந்திர தினத்தினை பகிஸ்கரிப்பதில்லை என்று நாங்கள் கருதினாலும் அனைவரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என்று அர்த்தம் இல்லை.தமிழ் மக்கள் பிரிவினைவாதிகள் அல்ல இந்த நாட்டில் சமமாக வாழ விரும்புகின்றவர்கள் என அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் காட்டவே கலந்துகொண்டார்.

சமாதான பாதையென்பது மலர்களினால் தூவப்பட்ட பாதையல்ல.கல்லும்முள்ளும் நிறைந்த பாதை. சமாதான பாதையில் செல்வது என்பதே மிகமிக கடினமானவிடயம்.அந்த கடினமான பாதையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும் சென்றுகொண்டுள்ளது.வருகின்ற சலசலப்புகளையெல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை.

அரசாங்கம் ஒரு தீர்மானத்தினை அறிவிக்கும்போது அதற்கு எதிராக இராணுவம் செயற்படுகின்றது.அந்த இராணுவத்துக்கு எதிராக ஒரு ஜனநாயக அரசு நடவடிக்கையெடுக்கமுடியாது.இந்தியா இங்குவந்தபோது அனைவரும் ஓடி ஒளிந்துவிட்டனர்.ஏனென்றால் அது அதிகார பலத்துடன் வந்தது.

ஆனால் இன்றை அரசு இவற்றையெல்லாம் அதிகார பலத்துடன் செயற்படுத்தமுடியாது.மற்றப்பக்கத்தில் ஏற்பட்டுள்ள பேரினவாதத்தின் பெரிய எழுச்சியேற்படாதவிதத்தில் தடம்பார்த்து நகர்த்திச்செல்லவேண்டிய அவசியம் உள்ளது.

ஆகவே எழுகின்ற அனைத்து சவால்களையும் மிகவும் நிதானமாக சமாளிக்கவேண்டியுள்ளது.தற்போது தேவையற்ற தீவிரவாதம் தேவையில்லை என்று தலைவர் சொல்லியுள்ளார்.மிகவும் பக்குவமான நிலையில் இந்த காலத்தினை நகர்த்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சு பதவி என்பது எங்களுக்கு மகுடம் அல்ல.ஆனால் இவற்றினை அலட்சியம் செய்து தூக்கியெறியவும் கூடாது.மக்களுக்காக இதனை நாங்கள் ஏற்றுள்ளோம்.
இனிவரும் காலங்களில் அமைச்சு நிகழ்வுகளின்போது மாலைகளை அணிவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.என்றார்.