செய்திகள்

சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது: சிறிதரன்

சட்டவிரோத சமுக விரோத செயல்பாடுகளுக்கு காரணமானவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு பொலிசுக்கும் மற்றும் சமுக அக்கறையுள்ள அனைவருக்கும் உள்ளது என யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறீதரன் வலியுறுத்தியிருக்கின்றார்.

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட கட்சிப்பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அரசியல் யாப்பின் 19வது திருத்தம் மற்றம் புதிய தேர்தல் முறைமைகள் தொடர்பாக விசேடமாக வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் பா.உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சிறப்புரையை நிகழ்த்தியிருந்தார்.

இந்த நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றி பா.உறுப்பினர் சி.சிறீதரன் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

“தற்பொழுதைய அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கும் மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சுக்கும் கையளிக்கும் நோக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுக்காணிகள் தனியார் காணிகள் காட்டுப்பகுதிகள் என்பவை தொடர்பான விபரங்களை திரட்டவேண்டியிருக்கின்றது.

இதை திரட்டி கொடுப்பதன் மூலம் அரசாங்கத்திடம் அது தொடர்பில் புள்ளிவிபரங்களோடு பேசமுடியும் அதற்கு கட்சி உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேசபை உறுப்பினர்கள் பாடுபடவேண்டும்.

இப்பொழுது வடபகுதியில் காணப்படுகின்ற சமுகசீரழிவுகள் பாலியல் வன்புணர்வுகள் கொலைகள் கொள்ளைகள் போதைவஸ்து பாவனை தொடர்பில் நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிவர்களாக இருக்கின்றோம்.

சட்டவிரோத சமுக விரோத செயல்பாடுகளுக்கு காரணமானவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு பொலிசுக்கும் மற்றும் சமுக அக்கறையுள்ள அனைவருக்கும் உண்டு.எமத பண்பாடு இன்று சிதைந்துகொண்டு போகின்றது.

இதற்கு எதிராக எமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படவேண்டும்.இது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இங்கு கலந்துகொண்ட பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிறப்புரையாற்றுகையில் கூறியதாவது:

“கடந்த ஆறாண்டுகளுக்கு மேலாக போர் முடிந்தபின்பு இந்த நாட்டிலே எவ்விதமான ஆட்சி நடந்ததென்பது எல்லோருக்குமே தெரியும்.உங்களை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றினோம் என சொன்ன கடந்த அரசாங்கத்தின் கருத்தை எமது மக்கள் ஒருபோதும் ஏற்றுக்ககொள்ளவில்லை.

எப்பொழுதுமே தேர்தல்களில் அக்கருத்து தோற்கடிக்கப்பட்டுள்ளது.நாம் எங்களுடைய அரசியல் இலக்கை எவ்விதமாவது அடையவேண்டும் நாங்கள்.நாம் போரில் தோற்றகடிக்கப்பட்டவர்கள் அல்ல.நாம் தோற்றவர்கள் அல்ல.

அதனால் எமது இலக்கை நாம் அடைவதற்கு முன்பு எம்மை அழித்துவிடுவதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கு முயற்சிக்கின் ஆபத்தான காலத்தில் நாம் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.