செய்திகள்

சம்பந்தனுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சு: யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரை இன்று சந்திப்பார்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரனன் ஆகியோருடன் இனநெருக்கடி தொடர்பாகவும், நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் அவர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இன்று வடமாகாண முதலமைச்சர் வி.வி.விக்னேஸ்வரன் உட்பட முக்கியஸ்த்தர்களை சந்திக்கவுள்ளார். மாகாண சபை எதிர்கொள்ளும் நெருக்கடி உட்பட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், ஹூயூகோ ஸ்வயார் தனது விஜயத்தின் முதல்நாளில் புதிய அரசாங்கம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். ஜனவரி எட்டாம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் பிரிட்டனின் சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இதுவரை சிறப்பானதாக அமைந்துள்ளதாக ஹூயூகோ ஸ்வயார் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான சந்திப்புகள் மூலம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகத்தின் பணியாளர்கள் சிறந்தமுறையில் பணியாற்றுவதாகவும் ஸ்வயார் தனது பாராட்டுக்களை முன்வைத்துள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ள அவர், முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடவிருப்பதாகவும் கூறியுள்ளார்.