செய்திகள்

சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கி சிங்களவரை நியமியுங்கள் : சிங்கள அமைப்புகள் கோரிக்கை

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்கி அந்த இடத்திற்கு சிங்களவர் ஒருவரை நியமிக்க வேண்டுமென சிங்கள பேரினவாத அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா தலைமை அலுவலகத்தில் சிங்கள பௌத்த அமைப்புகள் சில ஒன்றிணைந்து இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சிஹல ராவய அமைப்பின் தலைவர் மககந்தே சுதத்வ தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அந்த உடக சந்திப்பில் உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் விடுதலைப் புலிகள் அமைப்பால்  பெற்றுக்கொள்ள முடியாததை அமைதியான முறையில் தாம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக்கொள்வோம் என கருத்து வெளியிட்டுள்ளார். இது தனிநாட்டை பெற்றுக்கொள்வோம் என்பதனையே அர்த்தப்படுத்தும். எதிர்க்கட்சி தலைவர் என்பவர் முழு நாட்டு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால் இவரோ தமிழ் மக்களுக்காக மாத்திரமே கதைக்கின்றார். சிங்களவர் ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்காமையே இந்த நிலைமைக்கு காரணம். இதனால் அவரை அந்த பதவியிலிருந்து நீக்கி சிங்களவர் ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்க வேண்டும்.
இதேவேளை சம்பந்தனும் , வடக்கு முதலமைச்சரும் இணைந்து புலிகளுக்கு ஆயுதங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை தற்போதைய அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொள்வே முயற்சிக்கின்றனர். நல்லிணக்கம் என்ற விடத்தை முன்னால் காட்டி தமது நோக்கங்களை அடைய அவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்க கூடாது. அன்று மஹிந்த செய்த பெருந்தவறு இவ்வாறான கட்சியை தடை செய்யாது விட்டு வைத்ததுதான். அன்று அவர் புலிகளை தோற்றகடித்த உடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இவர்களின் கருத்துக்கள் தொடர்பாக அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.