சம்பளம் பெற்றுதருவதாக போலி கலந்துரையாடல் இடம்பெறுகின்றது: இராமலிங்கம் சந்திரசேகரன்
999ம் ஆண்டு தோட்ட தொழிலாளர்களின் சார்பில் செய்து கொள்ள ஆவணம் செய்யப்பட்ட கூட்டு உடன்படிக்கை 2015ம் ஆண்டு மார்ச் 31ம் திகதியுடன் 16 வருடங்களை கடந்து விட்டுள்ள நிலையில் இரு வருடங்களுக்கு ஒரு முறை அது சம்பள உயர்வு எனும் போலி கலந்துரையாடலின் அடிப்படையில் தூசு தட்டி ஒரு சொச்ச ரூபாய் சம்பள உயர்வு வழங்க ஏதுவாக வழிசமைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம் என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளத்தை ரூபா 800 ஆக உயர்த்த வேண்டும் எனவும், கூட்டு உடன்படிக்கையையும் துரிதப்படுத்த வேண்டும் என கோரியும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தலையீட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரி 07.06.2015 அன்று அட்டன் நகரில் துண்டு பிரசுரம் அவரால் மக்களிடம் விநியோகிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்……
இந்நிலைமைகளின் கீழ் கூட்டு உடன்படிக்கையில் தொழிலாளர்களின் சார்பாக இ.தொ.கா, எல்.ஜே.ஈ.டபிள்யூ,யூ மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பும், கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனமும் கைச்சாதிடுகின்றனர்.
1999ம் ஆண்டு கூட்டு உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஒரு தோட்ட தொழிலாளரின் நாட்சம்பளம் சுமார் 98 ரூபாவாக இருந்த நிலையில் 2015 அதாவது இன்று 450 ரூபாவாக காணப்படுகிறது.
அப்படியாயின் 16 வருடங்களின் முடிவில் ஒரு தோட்ட தொழிலாளிக்கு 352 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டு வருடமொன்றுக்கு 22 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள நிலைமையில் மாதமொன்றுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை தோட்ட தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியதாகும்.
மாதமொன்றுக்கு சத அடிப்படையில் உயர்த்த ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் உடன்படிக்கையில் ஆறுமுகன் தொண்டமான் தற்போதைய அரசின் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கைச்சாத்திடும் நிலையில் தொழிலாளர்களின் சார்பாக அர்த்தபுஸ்டிமிக்க உடன்படிக்கைக்கு பதிலாக காட்டிக்கொடுப்பு உயிலாக மாற்றி இருக்கின்றனர் என்றால் மிகையாகாது.
அத்தோடு இதிலிருந்து தோட்ட தொழிலாளர்கள் புதிய திசையில் பயணிக்க தயாராக வேண்டும். அதற்க்காக அமைப்பு ரீதியாக அணித்திரள வேண்டும். உரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் சம்பள உயர்வு போராட்டத்தை துரிதப்படுத்தக்கோரி போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பில் ராமலிங்கம் சந்திரசேகரனின் கருத்துக்களை கேட்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.