செய்திகள்

சம்பள அதிகரிப்பு விடயத்தில் இ.தொ.கா தொழிற்சங்க போராட்டம் செய்ய முடிவு

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்மந்தமான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வெளியேறியதை அடுத்து இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து 4ஆவது முறையும் எவ்வித இணக்கப்பாடின்றி ஒத்திவைக்கப்பட்டது. எனினும் சம்பள பேச்சு வார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் ஒரு தீர்வினை தெரிவிக்காததனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக அக்கட்சியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்மந்தமான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

இப்பேச்சு வார்த்தையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பாக அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் சிரேஷ்ட உபதலைவர் மாரிமுத்து ஆகியோரும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அமைப்பாளர் எஸ்.பி விஜயகுமாரன், செயற்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எ.இராஜதுரை, தொழில் உறவு ஆலோசகர் பி.நவரெட்ணம் ஆகியோரும் தொழிற்சங்க கூட்டுக் கம்பனி சார்பாக தலைவர் எம்.இராமநாதன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பாக பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க தலைவர் சுனில் போலியத்த ஆகியோரும் தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் சார்பாக ரொஷான் இராஜதுரை, லலித் அபேசேகர உட்பட நிறைவேற்று அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக மேலும் கலந்துரையாடி அதில் ஏற்றத்தாழ்வுகளை மேற்கொள்ள முடியும் என முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பாக இப்பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்ட போது அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவித்தது.

கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையில் இருந்து தாம் முழுமையாக விலகிக் கொள்வதாக பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை மேசையில் இருந்து வெளியேறிச் சென்றனர்.

அதே நேரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய இரண்டு தொழிற்சங்களான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பும் வெளியேறிச் செல்லாது தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது.

அதனைத் தொடர்ந்து பிரேரணை ஒன்றை முன் வைக்குமாறும் அது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயார் எனவும் முதலாளிமார் சம்மேளனம் ஏனைய இரண்டு தொழிற்சங்களுக்கும் தெரிவித்தது.

மேலும் இப் பேச்சு வார்த்தையை முன்னெடுப்பதற்கு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு, முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விஷேட குழு ஒன்றை நியமிப்பதெனவும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் பிரேரணை சம்மந்தமாக கலந்தாலோசித்து பேச்சு வார்த்தைகளை தொடர தாம் சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம் இதுவரை இருந்து வந்த புரிந்துணர்வு, இணக்கப்பாடு, நல்லிணக்கத்தை தொடர்வது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் உகந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டது .

கடந்த காலங்களில் தோட்டப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக அமைவது அவசியம் என முதலாளிமார் சம்மேளனம் சுட்டிக் காட்டியது.

நடைமுறை சாத்தியத்திற்கு ஒத்ததான சம்பள உயர்வு கோரிக்கை ஒன்றினை வெகு விரைவில் சமர்ப்பிப்பதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பும் விருப்பம் தெரிவித்ததுடன் திகதி குறிப்பிடப்படாது பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.