செய்திகள்

சம்பூர் மீள்குடியேற்றத்துக்கான காணிகளை விடுவிக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக மக்கள் குடியிருப்பு காணிகளில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கைச்சாத்திட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் கூறுகின்றார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம்விடுவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிலுள்ள காணிகள் இரு வார காலத்திற்குள் மக்களிடம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்படும் என அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் கூறுகின்றார்.

இது தொடர்பாக அவர் கூறுகயில்

முன்னைய அரசாங்கத்தினால் முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் கையளிக்கப்பட்ட 808 ஏக்கர் காணி மீளப் பெறப்பட்டு காணிகளை இழந்த மக்களிடம் மீளக் கையளிக்கப்படவுள்ளது.

அந்த பகுதியிலிருந்து 2006ம் ஆண்டு முற்பகுதியில் போர் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ள 207 குடும்பங்களும் முதற்கட்டமாக மீள்குடியேற்றப்படவிருக்கின்றார்கள்.

ஏனைய குடும்பங்களை பொறுத்தவரை கடற்படை முகாம் அமைந்துள்ள 224 ஏக்கர் காணி யை விடுவித்து 520 குடும்பங்களின் மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

கடற்படை பயிற்ச்சி முகாமை வேறிடத்திற்கு மாற்ற கடற்படை இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அந்த பகுதியில் மாற்றுக் காணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு 4- 5 மாதங்கள் வரை எடுக்கும் என்றார்.

தமது பிரதேச மக்களின் 9 வருட உறுதியான நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை கருதுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.

தமது பிரதேசத்திலுள்ள கடற்படை பயிற்ச்சி முகாம்க்குரிய மாற்றுக் காணி அடையாளமிடப்பட்டு அளவீடு செய்யப்பட்டுள்ளதால் இன்னும் சில மாதங்களில் முழுமையான மீள் குடியேற்றத்தை எதிர்பார்க்க முடீயம் என்றும் அவர் கூறினார்.