செய்திகள்

சம்பூர் மீள்குடியேற்றம் சாத்தியமா? நேரில் சென்று ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ ஆய்வு

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சுவீகரிக்கப்பட்டுள்ள சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்தார். அவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து செவ்வாய்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாகவும் அவர் உறுதியளித்திருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஒஸ்டின் பெர்ணான்டோ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பிரதேசத்திற்கு சென்று, அங்குள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். மாகாண ஆளுநருடன் திருகோணமலை அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் அங்கு சென்றிருந்தனர்.

சம்பூர் பிரதேசத்தை பார்வையிட்ட ஆளுநர், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் 9 ஆண்டுகளாக தங்கியுள்ள தங்களை நேரில் வந்து சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிந்த முதலாவது ஆளுநர் என்று கூறிய மக்கள், தங்களது விரைவான மீள்குடியேற்றத்தின் அவசியத்தை அவரிடம் வலியுறுத்தினர்.

சம்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படை முகாம் , முதலீட்டு வலயத்திற்கான காணிகள் அடையாளமிடப்பட்டுள்ளமை மற்றும் உத்தேச அனல் மின்நிலையம் போன்ற காரணங்களினாலேயே இந்த பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது.

கடற்படை முகாமை அகற்றுதல் அல்லது வேறு இடத்தில் அமைத்தல் அல்லது அதன் பரப்பை சுருக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தபோது, அது பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய விடயம் என ஆளுநரால் பதில் அளிக்கப்பட்டதாக கிழக்கு மகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறினார்.

அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு என அடையாளமிடப்பட்டுள்ள காணியின் அளவை குறைத்தல், உத்தேச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தை மீளாய்வு செய்தல் போன்ற முன்னெடுப்புகளின் மூலமும் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியும் என்று மக்களால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த ஆளுநர் ஓஸ்டின் பெர்ணான்டோ, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்று எதிவரும் செவ்வாய்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என கூறியதாகவும் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.