செய்திகள்

‘சரியாக நேரம் கணித்து வைக்கப்பட்ட ஒரு வெடி குண்டு’ இந்தத் தீர்மானம்: வை. கோபாலசாமி

ஐ. நா விசாரணை அறிக்கையை வெளியிடுவதை எவ்வாறு தாமதம் செய்யலாம் என்று இலங்கை , இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் சிந்தித்துக்கொண்டுள்ள இந்த நேரத்தில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானம் ‘சரியாக நேரம் கணித்து வைக்கப்பட்ட ஒரு வெடி குண்டு ‘ என்று தன்னிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி வர்ணித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது வட மாகாண சபையின் உறுப்பினராகவும் இருக்கும் எம். கே . சிவாஜிலிங்கம் குறிப்பட்டுளார்.

நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக தன்னுடன் தொலைபேசியில் கோபாலசாமி தொடர்புகொண்டபோதே இவ்வாறு தெரிவித்ததாக கூறிய சிவாஜிலிங்கம் தான் ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கஷ்டப்பட்டபோது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் பெரிய பயன் கிடைத்திருக்குமோ தெரியாது என்றும் ஆனால் இப்போது தருணம் பார்த்து இதனை நிறைவேற்றி இருக்கின்றமை சாலச் சிறந்தது என்றும் எல்லோருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்று குறிப்பிட்டதாகவும் சமகளத்துக்கு தெரிவித்தார்.