செய்திகள்

சர்ச்சைக்குள் ரணிலின் பிரதமர் நியமனம்: பதவி விலக மறுக்கும் டி.எம்.ஜயரட்ண

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது நடவடிக்கையாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியதித்திருப்பது புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முயற்சியில் மைத்திரி தரப்பினர் இறங்க வேண்டி நிலை இதனால் உருவாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இல்லை என்றும் ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால், தாம் பதவி விலகத் தயார் என்றும் டி.எம்.ஜெயரட்ண தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஏற்கனவே ஒரு பிரதமர் பதவியில் இருக்கும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்தது, அரசியலமைப்புச்சட்டத்துக்கு முரணானது என்று சட்ட நிபுணர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

சட்டரீதியாக இன்னமும் டி.எம்.ஜெயரட்ணவே பிரதமர் பதவியில் இருப்பதாகவும் கூறிய அவர், அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது மற்றொருவர்  நியமிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய பிரதமர் பதவியில் இருந்து விலகினால் மட்டுமே, புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஜெயரட்ண பிரதமராக தொடர்ந்தும் இருக்கும் நிலையில், புதிதாக ஒருவரை நியமித்தமை அரசியலமைப்புக்கு முரணானது எனவும் சட்டத்துறையினர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

பாராளுமன்றம் அடுத்தவாரம் கூடும் போது இந்த விபகாரம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதுடன், பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்படும்.