செய்திகள்

சர்ச்சை: மீண்டும் காஷ்மீரை சேர்ந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அப்ரிடி

நியூசிலாந்து உடனான ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் அளித்த அமோக ஆதரவு குறித்து கேப்டன் அப்ரிடியிடம் கேட்ட போது, ‘காஷ்மீரை சேர்ந்த மக்கள் நிறைய பேர் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

காஷ்மீர் ரசிகர்கள் ஆதரவு குறித்து அப்ரிடி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய அப்ரிடி “ நாங்கள் சரியாக விளையாடவில்லை. கடைசி நேரத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துவிட்டோம். ஓய்வு பற்றி பாகிஸ்தான் திரும்பிய பிறகு அறிவிப்பேன்.

எங்களுக்கு ஆதரவு அளித்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் இங்குவந்து எங்களுக்கு ஆதரவு அளித்த காஷ்மீர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே தனிப்பட்ட வகையில் காஷ்மீர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அதற்காக விமர்சிக்கப்பட்ட அப்ரிடி மீண்டும் காஷ்மீர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.