Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

சிரியாவில் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம், நிரந்தர அரசியல் தீர்வு: அமெரிக்கா, ரஷியா வலியுறுத்தல்

சிரியாவில் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம், நிரந்தர அரசியல் தீர்வு: அமெரிக்கா, ரஷியா வலியுறுத்தல்

சிரியாவில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு அதன் அடிப்படையில் நிரந்தரமான  அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என அமெரிக்காவும், ரஷியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷியாவும், கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் உள்ளன. அதிபர் பஷர் அல் ஆசாத் பதவியை விட்டு இறங்குவதுதான் இந்த பிரச்சனைக்கு முடிவாக அமையும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது.

ஆனால், இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் சிரியா நாட்டு மக்கள்தான் என்பது ரஷியாவின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், அரசுக்கும் எதிர்ப்பு குழுக்களுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தால்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் யோசனைப்படியும், அமெரிக்காவின் தலையீட்டினாலும் இருதரப்பினருக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரியாவில் அமைதி நிலவ நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் 17 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிரியா அரசு அதிகாரிகள் இடையே நேரடியாக அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க, ரஷியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பலமிக்க 17 நாடுகள் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்பட அரசியல்ரீதியான தீர்வை முன்னெடுத்து செல்ல வசதியாக சிரியா ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் தனிநபர் போராளி குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சியாளர்கள், ஹெஜ்புல்லா இயக்கப் போராளிகள் மற்றும் ரஷியா ஆதரவுப் படைகள் உள்பட அனைத்து தரப்பினரும் வெள்ளைக் கொடியை ஏந்தி போரை கைவிட வேண்டும். இருதரப்பினரும் தங்கள்வசம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த முடிவுக்கு மேற்கண்ட 17 நாடுகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு தடைப்பட்டுள்ள மனிதநேய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் மிக அவசரமாக தேவைப்படும் இடங்களிலும், போராளிகளால் கைப்பற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை அனுப்பும் பணிகள் தொடங்கின.

இதையடுத்து, அமெரிக்காவும், ரஷியாவும் சேர்ந்து உருவாக்கி கையொப்பமிட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 26-ம் தேதி பின்னிரவு 12 மணியில் இருந்து இங்குள்ள டமாஸ்கஸ், அலெப்போ, அல் கலாசே, ஜோபர் உள்ளிட்ட முந்தைய போர்க்களப் பகுதிகள் அமைதியாக காணப்படுகின்றன. இதனிடையே, சிரியா அரசுக்கு ஆதரவாக அங்கு குவிக்கப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தை ரஷியா கடந்தவாரம் திரும்ப அழைத்துக் கொண்டது.

putin1_3301732b
இந்நிலையில், சிரியாவில் நிரந்தர அமைதி ஏற்படுவது தொடர்பாக ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்று சந்தித்துப் பேசினர்.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ்-வும் கூட்டாக பேட்டியளித்தனர்.

சிரியாவில் இடைக்கால மாற்று அரசு ஏற்படுத்துவதற்கு வகைசெய்யும் முறையில் போராளி குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிரியா அரசு முன்வர வேண்டும். இந்த பேச்சுவார்த்தையின்போது ஆட்சிமாற்றம் மற்றும் திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்ட மசோதா போன்றவற்றை உருவாக்குவது எப்படி? என்பது தொடர்பாக வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இருதரப்பினரும் முடிவு செய்ய வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என அவர்கள் குறிப்பிட்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *