Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தான் அணு ஆராய்ச்சியாளர் குடும்பத்தினருக்கு வெளிநாட்டில் கருப்புப்பணம்: பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது

பாகிஸ்தான் அணு ஆராய்ச்சியாளர் குடும்பத்தினருக்கு வெளிநாட்டில் கருப்புப்பணம்: பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது

பாகிஸ்தானின் அணு ஆயுத ரகசியங்களையும், அணுஆயுத தயாரிப்பு உபகரணங்களையும் வடகொரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு ரகசியமாக விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அந்நாட்டின் அணு ஆராய்ச்சியாளர் அப்துல் காதர் கான், ஏ.கியூ.கான் என்றழைக்கப்படும் இவர், இந்த குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக் காவலை எதிர்த்து நீதிமன்றத்தில் கான் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, அவருக்கு எதிரான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் அரசு தளர்த்தியது. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்தித்துப்பேச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தெக்ரிக்-இ-தஹாபஸ் பாகிஸ்தான் என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ள ஏ.கியூ. கானின் குடும்பத்தினர் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் ஏராளமான கருப்புப்பணத்தை குவித்து வைத்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளது.

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.

இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் கடந்த மாதம் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ‘மொசாக் ஃபொன்சேகா’ என்ற நிதி ஆலோசனை மற்றும் சட்ட நிறுவனத்தின் மூலமாக இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பனாமா நிறுவனத்தின் கைவசம் இருந்த இந்த ஆவணங்களில் சில பகுதிகளை ரகசியமாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டனர்.

பணம் பதுக்கியவர்களில் முன்னாள், இந்நாள் பிரதமர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அடங்குவர். பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், பனாமா ஆவணங்களில் இடம் பெற்றுள்ள மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்களை தங்களது offshoreleaks.icij.org வலைதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, உலக நாடுகளில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட 3 லட்சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்களை தற்போது இந்த இணையதளத்தில் காண முடிகிறது.

இந்த பட்டியலின் மூலம் ஏ.கியூ. கானின் குடும்பத்தினர் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் ஏராளமான கருப்புப்பணத்தை குவித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. பஹாமாஸ் தீவில் உள்ள வஹ்டாத் என்ற போலி கம்பெனியின் பெயரால் ஏ.கியூ,கானின் தம்பி அப்துக் கையூம் கான், அவரது மனைவி ஹென்ரினா, அவர்களின் மகள்கள் டினா கான் மற்றும் அயிஷா கான் ஆகியோர் ஏராளமான பணத்தை வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தகவலை ஏ.கியூ, கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். என் பெயரிலோ, எனது குடும்பத்தாரின் பெயரிலோ எந்த வெளிநாட்டிலும் கம்பெனிகளோ, முதலீடோ, சொத்துகளோ கிடையாது என அவர் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *